சென்னையும் செஸ் விளையாட்டும் பிரிக்க முடியாத ஒன்று: விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்

சென்னை: சென்னையையும் செஸ் விளையாட்டையும் பிரிக்க முடியாது என்று முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் கூறினார். இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் பேசியதாவது: கடந்த ஒரு மாதமாக சென்னை செஸ் விளையாட்டை சுவாசித்து வருகிறது. நேப்பியர் பாலம் முதல் பால் பாக்கெட் வரை செஸ் அனைத்திலும் இடம்பெற்று வருகிறது. நாங்கள் அனைவரும் செஸ் விளையாட்டை சுவாசித்து வருகிறோம். ஆனால் கடந்த ஒரு மாதமாக செஸ் உலகம் சென்னையை சுவாசித்து வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தமிழ்நாட்டிற்கு கொண்டு சிறப்பாக அமைத்த தமிழக அரசு மற்றும் இந்திய செஸ் கூட்டமைப்பிற்கு என்னுடைய நன்றி.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பல சிறப்பான ஆட்டங்கள் இருந்தன. நான் 2000ம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற போது என்னுடைய அணியில் தற்போது உள்ள வீரர்கள் சிலர் பிறக்கவே இல்லை. ஆனால், தற்போது அவர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நான் செஸ் விளையாட்டை தொடங்கிய போது, எனக்கு உலக சாம்பியனாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், சென்னையும் செஸ் விளையாட்டும் இந்த அளவிற்கு வளர்ச்சி அடையும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. சென்னையும் செஸ் விளையாட்டும் பிரிக்க முடியாத ஒன்று. நம்ம செஸ் நம்ம சென்னை. மேலும் செஸ் போட்டிகள் சிறப்பாக நடத்த ஒத்துழைத்த தன்னார்வலர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு கூறினார்.

Related Stories: