சிறுவன் ஓட்டி சென்ற பைக் மோதி 3 வயது சிறுமி பரிதாப பலி: தந்தை அதிரடி கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி 3 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் சிறுவன் மற்றும் சிறுவனின் தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே விஜயமாநகரம் புது ஆதண்டார் கொல்லையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் மலர்விழி(3). இவர் நேற்றுமுன்தினம் மாலை வீட்டில் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக், மலர்விழி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே சிறுமி பலியானார். தகவலின் பேரில், அங்கு சென்ற மங்கலம்பேட்டை போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் சிறுவனின் தந்தையை கைது செய்துள்ள போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். சிறுவனையும் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: