கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு துரோகிகள்தான் காரணம்: தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தர்மபுரி: கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு உடன் இருந்த துரோகிகள் தான் காரணம் என்று தர்மபுரியில் நடந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் இருந்து கார் மூலம் தர்மபுரிக்கு வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமையில் மாவட்ட அதிமுக சார்பில் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தர்மபுரி மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிறிதுநேரம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து அவர் தர்மபுரி 4 ரோடு, பழைய தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரி சென்றார்.

நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: வழக்கு மூலம் எங்களை முடக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் முடியாது. கடந்த தேர்தலில் நமது தோல்விக்கு நம்முடன் இருந்த துரோகிகள்தான் காரணம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும். போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். எண்ணேகோல்புதூர்- தும்பலஅள்ளி, புலிகரை உள்ளிட்ட நீர்பாசன திட்டங்களை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் பேசுகையில் நெஞ்சிலேயே ஈரம், இரக்கம் இல்லாதவரிடம் கட்சித்தலைமை பொறுப்பை கொடுக்க முடியுமா என்றார்.

* எடப்பாடிக்குதான் பதவி வெறி; ஓ.பி.எஸ் தரப்பு பதிலடி

கிருஷ்ணகிரி: பொதுச்செயலாளர் பதவிக்கு பதவி வெறிபிடித்து அலைந்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளரான, பெங்களூர் புகழேந்தி நேற்று கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறினார். கிருஷ்ணகிரி வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்ட விவகாரம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அப்படி இருக்கையில் அவசர அவசரமாக பழனிசாமி ஊர் ஊராக சென்று பேசி வருகிறார்.

கிருஷ்ணகிரியில் பேசிய அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி, பதவி வெறி பிடித்தவர் என்கிறார். ஜெயலலிதா இறந்த பிறகு, பொதுச்செயலாளர் பதவிக்கு யாரும் தேவையில்லை என தீர்மானம் இயற்றிவிட்டு, அவரை அவமானப்படுத்தும் வகையில் பதவி வெறி பிடித்து பொதுச்செயலாளர் பதவிக்கு அலைந்தவர் பழனிசாமி. பொதுநலமாக பேசி வரும் பன்னீர்செல்வம்,இவர்களது விமர்சனங்களுக்கு பதில் கூறப்போவதில்லை. மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் மாநாடு போல, மாவட்டம் தோறும் கூட்டங்களை பன்னீர்செல்வம் நடத்துவார். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

Related Stories: