×

அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் ஒன்றிய அரசு அவசர கடிதம்: மனித கடத்தலை தடுக்க அறிவுரை

புதுடெல்லி: மனித கடத்தலை தடுப்பது தொடர்பாக அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவசர கடிதம் அனுப்பி உள்ளது. நாட்டில் மனிதர்கள் கடத்தல் அதிகமாகி வருவதால், ஒன்றிய அரசு கவலை அடைந்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவசர கடிதம் அனுப்பி உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:  மனித கடத்தலால் தேசிய, சர்வதேச அளவிலான பாதிப்புகள் உள்ளன. உலகமயமாக்கலின் விளைவாக சிறந்த வாய்ப்புகளைத் தேடி மக்கள் இடம் பெயர்வது அதிகரித்துள்ளது. இது, பெரும்பாலும் மனித கடத்தலுக்கு வழிவகுக்கிறது. கடத்தப்படும் நபர்கள் பெரும்பாலும் பாலியல் தொழில், கட்டாயத் திருமணம், வீட்டு அடிமைத்தனம், பிச்சை எடுப்பது,  உறுப்பு வர்த்தகம், போதைப் பொருளை கைமாற்றுவது, ஆயுத கடத்தல் போன்ற பல்வேறு  சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் உடல்ரீதியான வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல், அச்சுறுத்தல் மற்றும் வற்புறுத்தல் போன்றவற்றக்கும் ஆளாகின்றனர். உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் அதைச் சமாளிக்க பல உத்திகள் தேவைப்படுகின்றன. காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள், எல்லைப் பாதுகாப்பு  அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் இணைந்து செயல்பட்டு, தகவல்களை பரிமாறிக் கொள்வதின் மூலம் ஆள் கடத்தல் பிரச்னையை பெருமளவில்  தீர்க்க முடியும். எனவே, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மனித  கடத்தலுக்கு எதிரான கூட்டு ஆலோசனை கூட்டங்களை உயர் நீதிமன்றங்கள் நடத்த வேண்டும். ஒவ்வொரு நீதித்துறை கலந்தாய்வுக்கும் ₹2 லட்சம் வரை நிதி அளிக்கப்படும்.

Tags : Union Government , Union Government Urgent Letter to All High Courts: Advice to Prevent Human Trafficking
× RELATED சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான...