தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அதிகரிப்பு.! ஒரு பள்ளம் கூட இருக்கக் கூடாது: ஒரு வாரத்தில் மூட கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திருவனந்தபுரம்: ‘சாலை  விபத்துக்கள் அதிகரிப்பதால் ஒரு வாரத்திற்குள் அனைத்து குழிகள், பள்ளங்களை மூட  வேண்டும்,’ என்று தேசிய நெடுஞ்சாலை அமைப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் அதிரடி  உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள்  மிக மோசமான நிலையில் உள்ளன. சாலை முழுவதும் குழிகள் நிறைந்து காணப்படுவதால்  வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி நெடும்பாசேரி பகுதியில் உள்ள தேசிய  நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹாஷிம் என்பவர் பள்ளத்தில்  தடுமாறி விழுந்து பலியானது கேரளாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

பழுதடைந்த சாலைகளை  சீரமைக்க நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிடக் கோரி கேரள  உயர் நீதிமன்றத்தில்  ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி தேவன்  ராமச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே கேரளாவில்தான் தேசிய நெடுஞ்சாலைகள் நிலை மிக மோசமாக இருக்கிறது. இதனால்,  நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. சாலை  விபத்துக்கள் அனைத்தும் மனிதர்களால் ஏற்படுவதுதான்.

இனியும் சாலைகள்  குருதிக்களமாக மாறுவதை அனுமதிக்க முடியாது. எனவே, ஒரு வாரத்திற்குள்  கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து குழிகளையும் நெடுஞ்சாலை  அமைப்பு மூட வேண்டும். ஒவ்வொரு விபத்தும் நடைபெறும் போது  நீதிமன்றம் உத்தரவிட்டுக் கொண்டிருக்க முடியாது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பாக இருந்தாலும், பொதுப்பணித் துறையாக  இருந்தாலும் விபத்துக்களை தடுக்க, உடனடி  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்கள் இந்த விஷயத்தில் வேடிக்கை பார்த்துக்  கொண்டிருக்கக் கூடாது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உடனடி நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories: