ஒன்றரை மாத இழுபறிக்குப் பிறகு மகாராஷ்டிராவில் 18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: பெண்களுக்கு வாய்ப்பு தரவில்லை

மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு அமைந்து 40 நாட்களுக்கு மேலான நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் நேற்று செய்யப்பட்டது. 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள், பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளனர். ஷிண்டே முதல்வராகவும், பாஜ.வை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் இருக்கின்றனர். இவர்கள் பதவியேற்று 40 நாட்கள் கடந்த நிலையிலும், அமைச்சர்களை நியமிப்பதில் இழுபறி நீடித்தது.  

இந்நிலையில், மகாராஷ்டிரா அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ராஜ் பவனில் நேற்று நடந்த எளிமையான நிகழ்ச்சியில், 18 புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

18 புதிய அமைச்சர்களில் ஒருவர் மட்டுமே புதிய முகம். மற்றவர்கள் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். இதுபோல், பெண்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சரவையில் இடம் பெற்ற சஞ்சய் ரத்தோட், விஜய் குமார் காவிட், அப்துல் சத்தார், தானாஜி சாவந்த் ஆகியோர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. ரத்தோடுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு பாஜ தலைவர் சித்ரா வாக், சிவசேனா தலைவரும் முன்னாள் மேயருமான கிஷோரி பெட்னேகர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: