ஒரே பாலின ஜோடி தத்தெடுப்பது எப்படி? நாடாளுமன்ற குழு புதிய பரிந்துரை

புதுடெல்லி: ஒரே பாலி தம்பதியினர் குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரை தந்துள்ளது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், ஒரே பாலின திருமணங்கள் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்நிலையில், சட்டம் மற்றும் பணியாளர் நலத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தை ஒருங்கிணைந்து அனைத்து மதங்கள் மற்றும் ஆண், பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் (எல்ஜிபிடிக்யூ) சமூகத்தினரை உள்ளடக்கிய ஒரே மாதிரியான, விரிவான குழந்தை தத்தெடுப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது.

இது, ஒரே பாலின தம்பதிகள் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியுமா? என்ற கேள்வியை பரவலாக எழுப்பி உள்ளது. இது குறித்து குழந்தைகள் உரிமைகள் மையத்தின் வழக்கறிஞரான தாரா நருல்லா கூறுகையில், ‘‘இந்தியாவில் தத்தெடுப்பதை பாலியல் அடிப்படையில் சட்டம் தடை செய்யவில்லை. எந்த ஒரு நபரும் இந்து தத்தெடுப்பு, பராமரிப்பு சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் தத்தெடுக்கலாம். ஆனால், ஒரே பாலின ஜோடிகள் தத்தெடுப்பதற்கு இடமளிக்கும் சட்டம் எதுவும் இல்லை. எல்ஜிபிடிக்யூ ஜோடிகள் ஒரு பெற்றோராக இல்லாமல், தனி நபராக ஒன்றிய தத்தெடுப்பு மறுஆய்வு ஆணையத்தில் விண்ணப்பித்து, குழந்தையை தத்தெடுக்கலாம். இந்த விஷயத்தில், ஒரே பாலின திருமணங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டால் மட்டுமே எல்ஜிபிடிக்யூ ஜோடிகளுக்கு எதிரான பாகுபாடு என்பது முடிவுக்கு வரும்,’’ என்றார்.

Related Stories: