தங்கம் விலை ஒரே நாளில் ரூ.400 உயர்ந்தது: ரூ.39 ஆயிரத்தை தாண்டியது சவரன்

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது. அதே நேரத்தில் சவரன் மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. விலையேற்றம் நகை வாங்குவோரை சற்று கலக்கமடைய செய்துள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு கடந்த ஜூலை 1ம் தேதி உயர்த்தியது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை தொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேலாக உயர்ந்து வந்தது. பவுனுக்கு ரூ.1,100 வரை அதிகரித்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 6ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,845க்கும், சவரன் ரூ.38,760க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,850க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,800க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அதிரடியாக உயர்வை சந்தித்தது. நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,900க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,200க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Related Stories: