குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாமில் 13,878 மாணவர்கள் பங்கேற்பு: மாநகர போலீசார் நடத்தினர்

சென்னை: குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்து சென்னையில் உள்ள 148 பள்ளிகளில் படித்து வரும் 13,878 மாணவ, மாணவிகளுக்கு மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. சென்னை மாநகர மக்களை பாதுகாக்கவும், பெண்கள், சிறுவர், சிறுமியர் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதேநேரம், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளவும், பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் உள்ள 148 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாநகர காவல்துறை சார்பில் நேற்று முன்தினம் விழிப்புணர்வு முகாம் நடத்தினர். இந்த விழிப்புணர்வு முகாமில் 148 பள்ளிகளில் உள்ள 13,878  மாணவ, மாணவிகளுக்கு ‘குட் டச் மற்றும் பேட் டச்’ குறித்தும், பாலியல் சீண்டல்கள் ஏற்பட்டால் தங்களது பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் உடனே தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: