75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு: ஊறுகாய், ஜாம் எடுத்து செல்ல பயணிகளுக்கு தடை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 20 நள்ளிரவுவரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  

நாட்டின் 75வது சுதந்திரதின விழா வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, ஒன்றிய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் உச்சபட்சமாக 5 அடுக்கு பாதுகாப்பு நேற்றுமுன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனையிடுகின்றனர். விமான நிலைய வளகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.  

பார்வையாளர்கள் வருகைக்கான தடை ஏற்கனவே அமலில் உள்ளது. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதி 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது. விமான பயணிகள் திரவ பொருட்கள்,  ஊறுகாய்,  அல்வா,  ஜாம்,  எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. எனவே, உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு 1.30 நிமிடத்துக்கு முன்னதாகவும், சர்வதேச பயணிகள் 3.30 மணி நேரத்துக்கு முன்னதாகவும் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.

Related Stories: