சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் கோலாகல நிறைவு விழா: 600 பேர் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சி; வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல்வர் மு.க..ஸ்டாலின் பதக்கம் வழங்கினார்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மாலை பிரமாண்டமாக நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கண்கவர் கலைநிகழ்ச்சிகள், வெளிநாட்டு வீரர்கள், பார்வையாளர்களை வியக்கவைத்தது. 44வது சர்வதேச சதுரங்க போட்டியை நடத்தும் வாய்ப்பு முதல் முறையாக இந்தியாவுக்கு கிடைத்தது. அதனை நடத்தும் பொறுப்பை தமிழகம் ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இந்த போட்டியை நடத்த சென்னை அடுத்த மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது. போட்டிக்காக உடனடியாக ரூ.100 கோடியையும் முதல்வர் ஒதுக்கினார். 186 நாடுகள், 2000த்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டியை உலக நாடுகளே வியக்கும் வகையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலினே தலைமை ஏற்று நடத்தி வந்தார்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரமாண்ட தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28ம் தேதி நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில், அனைவரும் வியக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ்நாட்டின் சிறப்பை விளக்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை எடுத்துரைக்கும் காட்சிகள் இடம் பெற்றன.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கியது. இதற்காக 52 ஆயிரம் சதுர அடி, 22 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த போட்டிகளில் இந்தியா உள்பட 186 நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இந்திய வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு பரிசுகளை குவித்தனர். கடந்த 12 நாட்களாக சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை 6.30 மணியளவில் நடந்தது. விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.  

சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக இந்திய செஸ் அணியின் ஆலோசகர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர், 44வது சர்வதேச சதுரங்க போட்டி இயக்குநர் பாரத்சிங் சௌஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டர். மேலும் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலாளர் அபூர்வா, 44வது சர்வதேச சிறப்பு பணி அலுவலர் தாரேஸ் அஹமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, மதிவேந்தன், தலைமைச் செயலாளர் இறையன்பு, செயலாளர்கள் அபூர்வா, தாரேஷ் அகமது, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், ராஜா எம்பி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்த போது ஆளப்போறான் தமிழன், வெற்றிப்படிக்கட்டு பாடல்களுக்கு இசை ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து ‘இந்தியாவின் இதயத்துடிப்பு’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி கலைஞர்கள் மேடையில் நிகழ்த்தினர். மேலும் ஒரே மேடையில் டிரம்ஸ்-சிவமணி, வீணை-ராஜேஷ் வைத்யா, கீபோர்டு-ஸ்டீபன், புல்லாங்குழல்-நவீன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரே மேடையில் 4 கலைஞர்களின் நிகழ்ச்சிகள்  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கைத்தட்டி ரசித்தார். அதன் பிறகு பறக்கும் பியோனோ, பறக்கும் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடலை பியோனோவில் வாசித்தார் பியோனோ கலைஞர். அந்தரத்தில் பறந்தபடி பியோனா இசைத்த பெண்ணின் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக ஆச்சரியப்படுத்தியது. மேலும் வந்தே மாதரம் பாடலை அந்தரத்தில் பறந்தபடி பெண் பியோனோ கலைஞர் வாசித்தார். லேசர் ஒளியுடன் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதே போல பல்வேறு பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளக்கும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

600 கலைஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு கண்கவர் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். அனைத்து நிகழ்ச்சிகளையும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆர்வமிகுதியில் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் செல்போனில் நிகழ்ச்சிகளை பதிவு செய்த காட்சியை காணமுடிந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டைரக்டர் விக்னேஷ் சிவன் செய்திருந்தார்.

மேலும் வீரர்களை வரவேற்கும் வகையில் மாமல்லபுரம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் நேரு ஸ்டேடியத்தை சுற்றி அனைத்து பகுதிகளிலும் மின்னொளியில் காட்சியளித்தது. மொத்தத்தில் நிறைவு விழா சென்னை நகரே அதிரும் வகையில் இருந்தது. செஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி வெற்றி பெற்று முதல் பரிசான தங்கப் பதக்கத்தையும், அர்மீனியா நாட்டு அணி வெள்ளிப் பதக்கத்தையும், இந்திய பி அணி, வெண்கலப்பதக்கத்தையும் வென்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், தங்கம் பதக்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் அணி வீரர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

அவருடன் இணைந்து சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அர்கடி துவார்கோவிச் வெள்ளிப் பதக்கங்களையும், விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலப்பதக்கத்தையும் வழங்கினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணியினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குரூப் புகைப்படங்களையும் எடுத்தனர். அதேபோல பெண்கள் பிரிவில் தங்கம் வென்ற உக்ரைன் நாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கப்பதக்கத்தை வழங்கினார். ஜார்ஜியா அணிக்கு வெள்ளிப்பதக்கத்தை அர்கடி துவார்கோவிச்ம், இந்திய அணிக்கு வெண்கலப்பதக்கத்தை விஸ்வநாதன் ஆனந்தும் வழங்கி கவுரவித்தனர். 44வது ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா முடிநத் பிறகு, 45வது செஸ் ஒலிம்பியாட் நடத்தும் வாய்ப்பு ஹங்கேரி நாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் கொடி முறைப்படி இறக்கப்பட்டு, ஹங்கேரி செஸ் கூட்டமைப்பு தலைவரிடம் வழங்கப்பட்டது.

* சிவமணியுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்த முதல்வர்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கோலாகலமாக தொடங்கியது. ‘இந்தியாவின் இதயத் துடிப்பு என்ற பெயரில், டிரம்ஸ் சிவமணி தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவமணி டிரம்ஸ் வாசித்த படியே மேடையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்த இருக்கை அருகே சென்றார். அப்போது முதல்வர் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார். மேலும் செஸ் கூட்டமைப்பு தலைவரும் டிரம்ஸ் வாசித்தார். இந்த நிகழ்வின் போது இசைக்கப்பட்ட செம்மொழியான தமிழ்மொழி பாடலுக்கு இசை இசைத்தது பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்தியா, கீ போர்டு ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர். குறிப்பாக, ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாடல் இந்த நான்கு கருவிகளில் இருந்து இசைக்கப்பட்டது பார்வையாளர்களை கவர்ந்தது.

* அரங்கத்தை அதிர வைத்த மழலைகள்

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைப்பெற்றது. இதில் இடம்பெற்ற விதவிதமான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன. கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக லேசர் லைட் மூலமாக இசைக்கலைஞர்கள் அந்தரத்தில் பறந்தபடி சாகசம் செய்து, கண்களுக்கும், காதுகளுக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்தினர். அவர்கள் வாசித்த இசையில் ரஜினிகாந்தின் வெற்றி கொடி கட்டு பாடலும், விஜய்யின் ஆளப்போறான் தமிழன், சிங்கப்பெண்ணே ஆகியப் பாடல்கள் இடம்பெற்றன. மேலும், மேடைக்கு வந்த குழந்தைகள் நொடிகளில் ரூபிக்ஸ் கியூப் செய்து காட்டி அரங்கத்தை அதிர வைத்தனர்.

* பிரியா விடை கொடுத்த ‘தம்பி’

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், போட்டிகள் தொடர்பான வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க பணிகள் தொடங்கி செய்யப்பட்ட பல்வேறு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்கள் வீடியோ வடிவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வீடியோ இறுதியில் செஸ் ஒலிம்பியாட் நாயகன் ‘தம்பி’ அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரியாவிடை கொடுத்தார்.

* பறக்கும் பியோனோவில் பட்டையை கிளப்பிய பெண்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், வெளிநாட்டு பெண் இசை கலைஞர் பறந்து கொண்டே பியானோ வாசித்து அரங்கத்தை அதிர விட்டார். அவர் பியோனோவுடன் பறந்து கொண்டே ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடல் உள்ளிட்ட பாடல்களை இசைத்தார். மேலும் பறந்து கொண்டே படையாப்பா பாடலை டிரம்ஸ் இசைக் கலைஞர்கள் வாசித்தனர்.

* பாரம்பரிய விளையாட்டு

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, கபடி, மஞ்சுவிரட்டு, பூப்பந்தாட்டம், கண்ணாமூச்சி, சதுரங்கம் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளின் வரலாற்றை விவரிக்கும் வகையில் கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை வெளிப்படுத்தி அசத்தினர். இது தமிழர்களின் விளையாட்டுகளை பறைசாற்றும் விதமாக அமைந்தது.

* முதல் கிராண்ட்மாஸ்டர் கவுரவிப்பு

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவுக்கு, இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டரான மானுவேல் ஆரோன் அழைக்கப்பட்டிருந்தார். அவரை வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் அவருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

* கோட் சூட்டுடன் வந்த முதல்வர்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட் சூட்டுடன் பங்கற்றார். அவர் அரங்கத்துக்குள் நுழையும் போது ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் இசைக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் இருந்து 69 குளிர்சாதன பேருந்துகளில் வீரர், வீராங்கனைகள், நடுவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

* விஐபிக்கள் யார்?

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், முதல்வர் மு.க,ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோரும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

* அண்ணா, கலைஞருடன் ஜெயலலிதா படம்

மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில் தமிழகத்தின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் படம் மட்டுமின்றி அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எந்தக் கட்சி ஆளும் கட்சியாக உள்ளதோ அந்தக் கட்சியின் தலைவர்களின் படங்கள் மட்டுமே இடம் பெறும். ஆனால், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படமும் அவர் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தது.

* தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நடிகர் மகள்

செஸ் போட்டி நிறைவு விழாவில், லேசர் அலங்காரத்துடன் கூடிய கலைஞர்களின் கண்கவர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். அதை தொடர்ந்து பல்வேறு அசத்தலான கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories: