சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு முதல் ஒரு வருடத்திற்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதாவது ஜனவரி மாதம் 26 குடியரசு தினம், மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினம், ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினம், அக்டோபர் மாதம் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாள் உள்ளிட்ட நாட்களுடன் இனிவரும் காலங்களில் கூடுதலாக மார்ச் மாதம் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் மாதம் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினம் உள்ளிட்ட நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் நாட்டின் 75வது சுதந்திர தின விழா வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் ஆணையர் தாரேஸ் அஹமது அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். அனைவருக்கும் குடிநீர் கிடைக்கப்பெறும் வகையில் குடிநீரை அனைத்து குக்கிராமங்களுக்கும் முறையாக விநியோகம் செய்தல், நீர் தேக்க தொட்டிகள் மற்றும் பொதுக்குழாய்கள் அருகில் குளித்தல், துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற செயல்களை தவிர்த்தல். குடிநீரை சுத்தமான பாத்திரங்களில் மூடி வைத்து உபயோகித்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் மற்றும் குடிநீர் சிக்னத்தை உறுதி செய்தல்.

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி, சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், திட்டங்கள் மற்றும் நிதிக்குழு மானிய நிதியில் ேமற்கொள்ளப்பட்ட, எடுக்கப்பட்ட பணிகளின் விவரம், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீர்வழிப்பாதை மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 மறு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்-ஊரகம், பொறுப்பு துறைகள் பொருள்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

அனைத்து ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டத்திற்கான செலவின வரம்பு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. கிராமசபை கூட்டம் தொடர்பான அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: