நெல்லை-ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்படுமா?..தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலை மீண்டும் இயக்கிட வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி 2019 மற்றும் 2020 ஆகிய 3 ஆண்டுகளிலும் நெல்லையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த சிறப்பு ரயிலானது நெல்லையில் இருந்து புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, குடோர், வெள்ளூர், ஓமலூர், விஜயவாடா, கம்மம். வாரங்கல், ராமகுண்டம், சந்திரபூர், சேவாக்ரம், நாக்பூர், இட்டார்சி வழியாக ஜபல்பூருக்கு சென்றடைந்தது.

இந்த ரயிலை தென் மாவட்ட ரயில் பயணிகள் மட்டுமின்றி கொங்கு மண்டலத்தில் உள்ள ரயில் பயணிகளும் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கொரோனாவுக்கு முன்பு வரை 3 ஆண்டுகள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட இந்த ரயிலானது, அடிக்கடி அறிவிக்கப்பட்டு நெல்லையில் இருந்து மத்திய பிரதேசம் சென்றது. இந்த ரயிலை திருப்பதி செல்லும் பயணிகளும், ஆந்திராவின் பல்வேறு இடங்களுக்கு செல்வோரும் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கொரோனா குறைந்த நிலையில் இந்த ரயில் இயக்கப்படுவதற்கான எவ்விதமான சாத்தியக்கூறுகளும் இல்லாத நிலை காணப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து இரண்டு ரயில்கள் மட்டுமே ஜபல்பூருக்கு இயக்கப்பட்டன. கோயம்புத்தூரில் இருந்து கேரள வழியாக ஜபல்பூருக்கும், மற்றொன்று நெல்லையிலிருந்து தமிழக மாவட்டங்கள் வழியாகவே ஜபல்பூருக்கும் இரு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது கோயம்புத்தூரில் இருந்து செல்லும் ரயில் மட்டுமே ஜபல்பூருக்கு இயக்கப்பட்டு வருகிறது. எனவே தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட நெல்லை - ஜபல்பூர் சிறப்பு ரயிலை முன்புபோல் இயக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.

இதுகுறித்து நெல்லை, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி கடையம் அந்தோணி கூறுகையில், ‘‘நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் நல்ல கூட்டம் காணப்பட்டது. கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டில் நடைபெற்ற ஐஆர்சிடிசி மாநாட்டில் இந்த ரயிலை நிரந்தரமாக்குவதற்காக தென்னக ரயில்வே சார்பில் ரயில்வே வாரியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. ஆகவே சிறப்பு ரயிலாக  தொடர்ந்து இயக்கப்பட்டு வந்த இந்த ரயிலை மீண்டும் இயக்கி நிரந்தர ரயிலாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.

Related Stories: