இன்று மொகரம் பண்டிகை பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்: திருப்புவனம் அருகே மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு

திருப்புவனம்: திருப்புவனம் அருகே முதுவன்திடலில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாத்திமா பள்ளிவாசல் முன்பாக இந்துக்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் காலப்போக்கில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். தற்போது முஸ்லீம்கள் ஒருவர் கூட இங்கு இல்லை. ஆனால் அவர்கள் வழிபட்ட பாத்திமா பள்ளிவாசல் மட்டும் இங்கு இன்றும் உள்ளது.

இந்த பாத்திமா பள்ளிவாசலை புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது.

பாத்திமாவை தங்களின் கிராம தேவதையாக கருதி இப்து முறைப்படி காப்புக்கட்டி ஒருவாரம் விரதமிருந்து பூக்குழி திருவிழாவாக வருடம்தோறும் இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று மொகரம் பண்டிகை என்பதால் பள்ளிவாசல் முன்பாக குழி வெட்டி விறகுகளை போட்டு தீ வளர்த்து அதிகாலையில், விரதமிருந்த பக்தர்கள் கண்மாயில் நீராடிய பின் வரிசையாக இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்காக ஒரு வாரம் முன்னதாக இந்துக்கள் பள்ளிவாசலில் காப்பு கட்டி விரதமிருந்தனர். மற்ற ஊர்களில் தீ மிதி திருவிழாவில் தீ கங்குகள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இங்கு சுமார் அரை அடி ஆழத்திற்கு கங்குகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆண்கள் வரிசையாக பூக்குழி இறங்கினர். இவர்களுக்கு இஸ்லாமியர்கள் சிலர் திருநீறு பூசி ஆசி வழங்கினர். விரதமிருந்த பெண்கள் பள்ளி வாசல் முன்பாக வரிசையாக துணி போர்த்தி அமர்ந்தனர். அவர்கள் தலையில் தீ கங்குகள் கொட்டப்பட்டன. இதனை பூ மெழுகுதல் என்றழைப்பர். இவ்வாறு வழிபடுவதால் தங்களை நோய் நொடி எதுவும் அண்டாது என்பது அவர்களின் நம்பிக்கை. பூக்குழி இறங்கிய பின் சப்பர ஊர்வலம் இன்று அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. இன்றளவும் முதுவன்திடலில் விவசாயத்தின் முதல் விளைச்சலை பாத்திமாவுக்கு படைத்த பின்னரே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் பாத்திமா கபடி குழு, பாத்திமா கிரிக்கெட் குழு என பெயரிட்டுள்ளனர்.

விதைப்புக்கான விதை, திருமண அழைப்பிதழ் உள்ளிட்டவற்றை பாத்திமா பள்ளிவாசலில் வைத்து வழிபட்ட பின்னரே மற்ற பணிகளை இந்துக்கள் துவக்கி வருகின்றனர். இஸ்லாமியர்கள் வசிக்காவிட்டாலும் அவர்கள் நினைவாக பள்ளிவாசலை புதுப்பித்து வழிபட்டு வருகின்றனர் முதுவன்திடல் கிராம இந்து பக்தர்கள்.

Related Stories: