அந்தியூர் அருகே பழுதான குடிநீர் மேல்நிலை தொட்டியை சரிசெய்ய கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்

அந்தியூர்: பழுதான குடிநீர் மேல்நிலை தொட்டியை சரிசெய்ய கோரி அந்தியூர் அருகே  அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைப்பிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது அந்தியூர் காலனி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மேல் பகுதி பழுதடைந்துள்ளதால் மழைக்காலங்களில், மழை நீர் குடிநீர் தொட்டியில் விழுந்து நல்ல தண்ணீருடன் கலந்து விடுகிறது.

இதனால் அந்த தண்ணீரை அந்தியூர் காலனி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்தியூர் காலனி சேர்ந்த 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை மலை கருப்புசாமி கோயிலுக்கு செல்லும் ரோட்டில் அந்தியூர் காலனி பஸ் நிறுத்தத்தில் அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி தலைவர் சுமதி தவசியப்பன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: