ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்குவது அரசின் கடமை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: ஏழை எளிய மக்களுக்கு இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்குவது இலவசம் அல்ல என்றும் அது அரசின் கடமை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  கூறியுள்ளார். தொழிலதிபர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் பல லட்சம் கோடி கடன்களை இலவசம் என்று அவர் சாடியுள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர விழாவை முன்னிட்டு 115 அடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்கள் இடம் பெறுவதில் தவறில்லை என்றார்.

வங்கியில் நிலைவையில் உள்ள பல லட்சம் கோடி தொகையை தள்ளுபடி செய்வதே உண்மையான இலவசம் என்று மோடி அரசை கெஜ்ரிவால் சாடினார். தொழிலதிபர்களுக்கு வரிச்சலுகை கொடுப்பதும் இலவசம் என்று அவர் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்கள் இடம்பெறுவதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியே கெஜ்ரிவால் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இலவச மின்சாரம் , இலவச பேருந்து பயணம், இலவச குடிநீர் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் ஏழை மற்றும் சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டம் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. மிகப்பெரிய தொழில் நிறுவனங்களையோ அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களையோ வலுப்படுத்த கூடிய வகையில் எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அந்த கட்சி சுட்டிகாட்டியுள்ளது.

Related Stories: