விமானத்தின் கழிவறையில் கிடந்த ‘டிஷ்யூ’ பேப்பரில் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வாசகம்: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு 175 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் கழிவறையின் ஓரத்தில் டிஷ்யூ பேப்பர் கிடந்தது. அதில் பெயர் குறிப்படப்படாத சில வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இந்தியில் எழுதப்பட்டிருந்தது. விமானத்தின் பணியாளர்கள் அந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து, விமான பாதுகாப்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அதன் விபரத்தை தெரிவித்தனர்.

அதையடுத்து அந்த விமானம், நேற்றிரவு 9.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அதன்பின் சிஐஎஸ்எஃப் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவு பணியாளர்கள் விமானத்தை முழுமையாக சோதனையிட்டனர். வெடிகுண்டு செயலிழப்புப் படை, மோப்ப நாய்ப் படை, சிஐஎஸ்எஃப் ஆகியவற்றின் ஆய்வுக்குப் பிறகு ஒவ்வொரு பயணிகளின் கையால் எழுதப்பட்ட எழுத்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அதன்பின், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்டது புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக கியாப் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: