×

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு உடன் இருந்த துரோகிகள் தான் காரணம்: ஓபிஎஸ் மீது எடப்பாடி தாக்கு

தர்மபுரி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று தர்மபுரி வந்தார். அவருக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நான் சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று தொண்டர்கள் ஆசியால் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளேன். அதிமுகவை ஒருபோதும் அழிக்க முடியாது. அதிமுகவை திட்டமிட்டு முடக்க சில துரோகிகள் முயற்சி செய்கின்றனர். அவற்றை தவிடுபொடியாக்குவோம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தர்மபுரியில் 5 தொகுதியையும் கைப்பற்றினோம். கட்சியினர் மீதுபொய் வழக்குகள் போட்டு வருகின்றனர். அதனை முறியடிப்போம். வழக்கு மூலம் எங்களை முடக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் முடியாது. தர்மபுரி போன்று நாம் வெற்றி பெற்றிருந்தால் தமிழகத்தில் நாம்ஆட்சியை கைப்பற்றி இருப்போம். நமது தோல்விக்கு நம்முடன் இருந்த துரோகிகள்தான் காரணம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்றார். ஓபிஎஸ் உள்ளிட்டோரைத்தான் எடப்பாடி மறைமுகமாக தாக்கியுள்ளார் என அதிமுகவினர் கூறினர்.


Tags : Assembly elections ,Edapadi ,OPS , Assemblies election, AIADMK defeat, traitors are the reason, attack on OPS
× RELATED 5 மாநில பேரவை தேர்தல் ரூ.340 கோடியை வாரி விட்ட பாஜ