தன்கர் துணை ஜனாதிபதி ஆனதால் மேற்குவங்க புதிய ஆளுநர் மாஜி சிபிஐ அதிகாரி?... மம்தாவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக திட்டம்

புதுடெல்லி: ஜக்தீப் தன்கர் துணை ஜனாதிபதியாக தேர்வானதால் மேற்குவங்க புதிய ஆளுநராக முன்னாள் சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானாவை நியமிக்க ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதியாக தேர்வு  செய்யப்பட்ட நிலையில் அவர் வரும் 11ம் தேதி துணை ஜனாபதிபதி பதவியை  ஏற்கவுள்ளார். இவர் மேற்குவங்க ஆளுநராக இருந்த போது திரிணாமுல் காங்கிரஸ்  தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு நிர்வாக ரீதியாக பல்வேறு  குடச்சல்களை கொடுத்து வந்தார்.

அதனால் ஆளுநர் மாளிகைக்கும், முதல்வர்  அலுவலகத்துக்குமான இடைவெளி அதிகமானது. இந்த நிலையில் மேற்குவங்கத்திற்கு அடுத்த ஆளுநர் யார்? என்ற பரபரப்பு தலைநகரில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘முன்னாள் சிபிஐ சிறப்பு இயக்குநரும், டெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிகவும் பிடித்தமானவருமான ராகேஷ் அஸ்தானா, மேற்குவங்க ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ளது.

கடந்த 1984ம் ஆண்டு குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அஸ்தானா, ஏற்கனவே போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக அதிகாரியாகும், 2002ல்  நடந்த கோத்ரா ரயில் தீவிபத்து வழக்குகளை கையாண்டார். பீகார் முன்னாள்  முதல்வர் லாலு பிரசாத் யாதவை, கடந்த 1997ல் கால்நடை தீவன ஊழல் வழக்கில்  கைது செய்தார். சிபிஐயில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லி போலீஸ் கமிஷனராக பணியாற்றினார்.

தற்போது ஓய்வில் உள்ள அவருக்கு மேற்குவங்க ஆளுநர் பதவி வழங்கப்படலாம். தற்போது மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் மேற்குவங்கத்தை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருவதால், உடனடியாக அங்கு ஆளுநரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அஸ்தானா மேற்குவங்க ஆளுநரானால், பாஜக அரசின் முக்கிய எதிரிகளில் ஒருவராக கருதப்படும் முதல்வர் மம்தா அரசுக்கு பலவகைகளில் அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: