அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் உடல் நலக்குறைவால் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

திண்டுக்கல்: அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் உடல் நலக்குறைவால் காலமானார். மாயத்தேவர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் வசித்து வந்தார். அதிமுக தொடங்கப்பட்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வான மாயத்தேவர்(88) உடல்நலக்குறைவால் காலமானார். அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர். 1973-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடிக்கல்லாக இருந்தவர் மாயத்தேவர்.

தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு 1973-77, 1977-80, 1980-84 என தொடர்ந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை பாராட்டி அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தி; இவரை தன்னுடைய மூத்த மகன் என்றே அழைத்தனர். அதேபோல முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னுடைய உடன் பிறந்த சகோதரர் என்று இவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் இவரை பாராளுமன்றத்தின் சிங்கம் என்று அழைத்துள்ளார். கலைஞர் அவர்கள் இவரை பாராளுமன்றத்தின் பீரங்கி என்று அன்றைய கால கட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பாராட்டியுள்ளார்.

88 வயதான இவர் தனது இல்லத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் இல்லத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: