திண்டுக்கல் அருகே ஏரி வெட்டிய இரு தச்சர்களை நினைவுகூரும் தமிழ் கல்வெட்டு: கிபி 9ம் நூற்றாண்டை சேர்ந்தவை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கிபி 9ம் நூற்றாண்டை சேர்ந்த ஏரி வெட்டிய தச்சர்களை நினைவுகூர்ந்து தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு தமிழக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் புகையிலைப்பட்டியிலிருந்து வடமதுரை செல்லும் வழியில் ராமநாதபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரில் உள்ள பெரிய பாறையில் கோமாறஞ்சடையான் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் வரகுண பாண்டியன் கால (கிபி 862 - 885) கல்வெட்டு உள்ளது.

தமிழ் எழுத்துக்களால் 11 வரிகளில் ஆழமாக இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் அருகே பாண்டியரின் சின்னமாகிய மீனுடன் வில், குத்துவிளக்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பொதுவாக தமிழகத்தில் ஏரிகளை உருவாக்கிய அரசர்கள், அதிகாரிகளின் பெயர்களையே கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஏரிகளை தோற்றுவித்த தச்சர்களின் தலைமுறையை தெரிவிக்கும் கல்வெட்டு மிக குறைவு. இந்நிலையில் ராமநாதபுரம் கல்வெட்டு தமிழக வரலாற்றில் ஏரி செய்யும் தச்சர்களை பற்றியும், அவர்களது ஊதியம் குறித்தும் மிக முக்கிய செய்திகளை தருகிறது.

இக்கல்வெட்டு குறித்து பழநியாண்டவர் மகளிர் கல்லூரியின் வரலாற்று துறை தலைவர், பேராசிரியர் ஜெயந்திமாலா மற்றும் ஆராய்ச்சி மாணவர் கோமதி கூறுகையில், ‘‘முற்கால பாண்டியர் அரசியல் வரலாற்றிலும், பொருளியல் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க மிக முக்கியமான கல்வெட்டு இது. இந்த கல்வெட்டு இரண்டு முக்கியமான செய்திகளை கூறுகிறது. முதலாவதாக இரண்டாம் வரகுண பாண்டியன், சோழ நாட்டில் கும்பகோணம் பகுதியில் உள்ள இடவை (காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே இருந்த இடையாற்றுமங்கலம்) என்ற ஊரின் மீது படையெடுத்து சென்று வெற்றி பெற்றதை கூறுகிறது.

இரண்டாவதாக அப்போரில் பங்கு பெற்ற பராந்தக பள்ளி வேளானான நக்கம் புள்ளன், கல்வெட்டு உள்ள பகுதியில் தனது பெயரால் புள்ளனேரி என்ற ஒரு ஏரியை தோற்றுவித்து அதற்கு மடையும் அமைத்ததை கூறுகிறது. சோழ நாட்டில் நடந்த போர்களில் முக்கிய போராக கும்பகோணம் அருகே உள்ள இடவை என்ற ஊரில் நடைபெற்றுள்ளது. இடவை போரில் முக்கிய பங்கு வகித்த பராந்தக பள்ளி வேளானான நக்கன் புள்ளன் என்ற அதிகாரி தனது பெயரில் அப்பகுதியில் பாசன ஏரியை உருவாக்கி கொண்டிருக்கும்போது காலமானார். அவரது மகன் புள்ளன்நக்கன் தனது தந்தை விட்டு சென்ற குறைப்பணியை செய்து முடித்து வைத்துள்ளார்.

இப்பணியை செய்த காலத்தில் அங்கு வடுகன் கூற்றன் என்ற தச்சன் பணியில் ஈடுபட்டுள்ளார். ஏரியை உருவாக்கும் வேலை நடந்து கொண்டிருக்கும்போது அந்த தச்சனும் இறந்து விட்டதால், அவரது மற்றொரு மகனான தச்சன் ஊதியம் பெற்று இந்த ஏரி பணியை முடித்து வைத்தார். இதற்கு காணியாக பள்ளி நாட்டின் இரண்டு பகுதிகளிலும் உள்ள ஊர் குளங்களில் இருந்து தலைநீர் பாயும் நிலம், தச்சனுக்கு வழங்கப்பட்டது என கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டில் குறிப்பிடும் ஏரி இந்த கல்வெட்டு அருகிலேயே பாண்டிக்குளம் என்ற பெயரில் இன்றும் பாசன குளமாக இருந்து வருகிறது. இக்கல்வெட்டு தற்போது தமிழக அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது

Related Stories: