திருமணம் செய்ய மறுத்த காதலனை கரம் பிடித்த நர்சிங் மாணவி: போலீசார் முன்னிலையில் நடந்தது

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகள் கார்த்திகா (19). சேலம் அருகே உள்ள தாராமங்கலம் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், விஜயமாநகரம் பகுதியை சேர்ந்த ஞானசேகர் மகன் பிரசாந்த் குமார் (25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கார்த்திகாவை பிரசாந்த்குமார் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரசாந்த்குமாருக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதை அறிந்த கார்த்திகா அவரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து தனது பெற்றோருடன் சேர்ந்து மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகா விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் காதலித்து வந்தது உறுதிபட தெரியவந்தது. இதையடுத்து இருவரின் பெற்றோரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்த போலீசார், தொடர்ந்து மகளிர் காவல் நிலையம் எதிரே உள்ள வண்ணமுத்து மாரியம்மன் கோயிலில், இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

அப்போது இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, கார்த்திகாவின் கழுத்தில் பிரசாந்த்குமார் தாலி கட்டினார். தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: