கணவருடன் வீடியோ காலில் பேசிய போது கருத்து வேறுபாடு: அரசு பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் செந்தில். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ஞான பாக்கிய பாய் (33). கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தில் பரப்புரையாளராக பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த தம்பதி அடிக்கடி வீடியோ காலில் பேசுவதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று அதிகாலையும் ஞான பாக்கிய பாய், வெளிநாட்டில் உள்ள கணவரிடம் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ஞான பாக்கிய பாய் திடீரென போன் இணைப்பை துண்டித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்ட பிறகும் போனை எடுக்கவில்லை. இதையடுத்து அருகில் உள்ள உறவினருக்கு போன் செய்து விபரத்தை கூறி இருக்கிறார். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, ஞான பாக்கிய பாய் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவருடன் வீடியோ காலில் பேசியபோது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: