வேலங்குடியை சேர்ந்தவர்கள் மாட்டு வண்டிகளில் அழகர்கோவிலுக்கு பாரம்பரிய பயணம்: 5 தலைமுறைகளாக தொடரும் வழிபாடு

காரைக்குடி: காரைக்குடி அருகே வேலங்குடியை சேர்ந்தவர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் குடும்பத்துடன் மதுரை அழகர்கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர். காரைக்குடி அருகே வேலங்குடியை சேர்ந்த மக்கள் ஒவ்வொரு வருடமும் மதுரை மாவட்டம், அழகர்கோவில் 18ம்படி கருப்பர் கோயிலில் நடக்கும் தேரோட்டத்துக்கு செல்வது வழக்கம்.

இதற்காக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் 22 மாட்டு வண்டிகளில் (கூட்டு வண்டி) கோயிலுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றம் சமையல் பொருட்களை எடுத்து கொண்டு பயணம் மேற்கொள்கின்றனர். ஆக.10ம் தேதி அழகர்கோவில் செல்லும் இவர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு ஆக.12ம் தேதி 18ம்படி கருப்பருக்கு நடக்கும் தேரோட்டத்தில் தேர் வடம் இழுத்துவிட்டு மீண்டும் சனிக்கிழமை ஊர் திரும்புகின்றனர். பராம்பரிய முறைப்படி கடந்த 5 தலைமுறைக்கு மேல் இதுபோன்று மாட்டு வண்டியிலேயே சென்று வருவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடந்த 5 தலைமுறையாக மாட்டு வண்டி கட்டி குலம்தெய்வமான அழகர்கோவில் 18ம் படி கருப்பரை தரிசனம் செய்ய செல்கிறோம். முதலில் 2 வண்டிகளிலேயே சென்றுள்ளனர். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக 20க்கும் மேற்பட்ட வண்டிகளில் செல்கிறோம். குழந்தைக்கு முதல் முடி இறக்குதல் இக்கோயிலில் தான் செய்ய வேண்டும். அதுவும் மாட்டு வண்டியில் பயணம் செய்து தான் சென்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்பது மரபு.

அதனை பின்பற்றி எந்த ஊரில் இருந்தாலும் வந்து நேர்த்திக்கடனை செலுத்திவிடுவார்கள். இந்த வருடம் 22 வண்டிகளில் செல்கிறோம். குழந்தைகளுக்கு முடி இறக்கி, 18ம்படி கருப்பருக்கு கிடாவெட்டி நேர்த்திகடன் செலுத்தி, தேர்வடம் இழுத்துவிட்டு ஊர் திரும்புவோம். ஆண்டுதோறும் தவறாமல் பாரம்பரியமாக இதனை கடைபிடித்து வருகிறோம் என்றனர்.

Related Stories: