கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு உயர் ரக போதை மருந்து விற்ற 3 பேர் கைது: 3 பைக்குகள் பறிமுதல்

சேலம்: சேலம் அருகே கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருள் விற்பனை செய்து வந்த கேரள இளைஞர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பைக்குகள், எடை மிஷின் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சீரகாபாடி, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும், தமிழகத்தின் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் என நூற்றுக்கணக்கான மாணவர்கள் அப்பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதனிடையே இந்த மாணவர்களை குறி வைத்து விலை உயர்ந்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் வந்தது.

இதனையடுத்து, திட்டமிட்ட குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ சக்தி ஆகியோர் இதுகுறித்து அப்பகுதியில் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளாவைச் சேர்ந்த வாலிபர்களும், கல்லூரி மாணவர்களும், சின்ன சீரகாபாடி பகுதியில் தங்கியிருந்து `மெத்தம்பேட்டமைன்’ என்ற உயர் ரக போதை பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார், போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஆலன் கே பிலிப் (23), அதே ஊரைச் சேர்ந்த பிஇ 2ம் ஆண்டு படித்து வரும் அமல் (20) மற்றும் பிஇ இறுதியாண்டு படித்து வரும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த சித்தாரப் பட்டியைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (22) ஆகிய மூவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில், பெங்களூரில் இருந்து `மெத்தம்பேட்டமைன்’ என்ற உயர் ரக போதைப் பொருளை வாங்கி வந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. கண்ணாடி இழை போன்ற ஒரு கிராம் மெத்தம்பேட்டமைனை கசக்கி பயன்படுத்தினால், ஒரு வாரம் வரை போதை இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து 3 பேரும் ஆட்டையாம்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 பைக்குகள், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான தலா ஒரு கிராம் எடை கொண்ட 11 பாக்கெட்  `மெத்தம்பேட்டமைன்’ போதை பொருள், நவீன எடை இயந்திரம் மற்றும் 2 போதை பொருள் டெஸ்டிங் மிஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: