நலிவுற்ற பனைத்தொழிலை மேம்படுத்த உடன்குடி பகுதியில் ‘மினி பூங்கா’ அமைக்கப்படுமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

உடன்குடி: ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமான பனைத்தொழிலை மேம்படுத்த பனை சார்ந்த உணவுப்பொருட்களை மேம்படுத்த உடன்குடி பகுதியில் மினி பூங்கா அமைக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள், பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நலிவுற்று வரும் பனைத்தொழிலை மேம்படுத்த, பனைத்தொழிலாளர்களுக்கு வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த தமிழ்நாட்டின் தேசிய மரம், கற்பக விருட்சமான பனைமரம் தமிழகத்தில் சுமார் 5கோடி இருப்பதாகவும், அதிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 3கோடிக்கு மேல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் உடன்குடி சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. உடன்குடி பகுதியில் கிடைக்கக்கூடிய பனை சார்ந்த உணவுப்பொருளான கருப்பட்டி, கற்கண்டு, புட்டு கருப்பட்டி, சில்லு கருப்பட்டி, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, மற்றும் பனங்கிழங்கு மாவில் இருந்து தயாரிக்கக்கூடிய உணவு பொருள்கள் என அனைத்தும் சிறப்பு வாய்ந்ததாகும்.

பர்மா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட உலக அளவில் உடன்குடி கருப்புகட்டி என போர்டு வைத்து வியாபாரம் செய்வதாகவும் அங்கு சென்று வந்தவர்கள் கூறும் அளவிற்கு புகழ் பெற்று விளங்குகிறது. பனை சார்ந்த உணவுப்பொருட்களில் கால்சியம் சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து மிகுந்ததாகவும், உடலுக்கு வலிமை தரக்கூடிய சத்தான பொருட்கள் மட்டுமல்லாமல் இயற்கையானதாகவும், எதிர்ப்பு சக்தி மிக்கதாகவும், ஆரோக்கியமிகுந்ததாகவும், நோய்களைத்தடுக்கக்கூடிய மருத்துவ குணம் கொண்ட உணவுப் பொருளாகவும் உள்ளது. மேலும் விறகுக்காகவும் மற்றும் செங்கல் சூளைகளுக்காகவும் வெட்டி அழிக்கப்பட்டு வரும் பனை மரங்களை பாதுகாத்து, வளர்க்கவும், மேலும் நிலத்தடி நீரை பாதுகாக்கவும், புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பூமியையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்து வருகிறது. பனைமரம் ஓரிடத்தில் வளராமல் கருகி வருவதென்றால் அந்த பகுதி கடும் வறட்சிக்குள்ளாகும் என மூத்தோர் கூறுவர். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தண்ணீர் இல்லாமலே வளரும் தன்மையுடைய பனைமரம், காடு, தோட்டம், வயல்காடு, வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வளர்த்து வந்தனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை வாழ்வின்ஓர் அங்கமாக இருந்து வந்த பனைமரம் தற்போதைய வாழ்வியலில் அவசியமே இல்லாமல் போய்விட்டது. தற்போது அழியும் தருவாயை எட்டியிருக்கும் பனைமரம், பனைத்தொழிலை ஊருக்கு 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் செய்து வந்த நிலையில் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பனைத்தொழில் செய்து வருகின்றனர். பனையைப் பாதுகாத்தல், நடுதல், வளர்த்தல் மற்றும் உணவு உற்பத்தி அதனை சார்ந்த பொருட்களை பயிரிட்டு, வாய்ப்புகள் குறித்தும், பனை வளர்ச்சிக்கான மற்றும் மேம்படுத்தலுக்கான பணிகளையும், வணிக ரீதியில் வெற்றியடைய செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும், பனைத்தொழிலாளர்களை பொருளாதாரத்தில் மேம்படுத்தும் வகையில் பனைப்பொருட்களை முறையாக சந்தைப்படுத்தவும், பனைத்தொழிலை பாதுகாக்கவும், பனைச்சார்ந்த உணவுப்பொருட்களை பதப்படுத்தவும் மினிபூங்கா அமைக்க வேண்டும். மேலும் வருடத்தில் மூன்று முதல் நான்கு மாதங்கள் மட்டுமே தொழில் புரியும் பனைத்தொழிலாளர்களுக்கு தொழில் இல்லாத நாட்களை கணக்கீடு செய்து முறையாக ஆய்வு செய்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பனை வணிக நிறுவன தலைவர் டாக்டர் கென்னடி கூறும்போது,   பல சிறப்புகள் கொண்ட பனை உணவுப்பொருட்களை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றுவதற்கு பனைத்தொழிலில் ஈடுபட்டு வரும் பனை தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தொழிலாளர்கள் மேம்பாட்டுக்காக \பனை பொருள் உற்பத்தியாளர் குழுக்களை\  அமைத்து வருகிறோம். குழுவில் இணைந்துள்ள பனைத்தொழிலாளர்களுக்கு பனை, பனை பொருள் சார்ந்த பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறோம். ஒரு கோடி பனை மர விதைகள் விதைப்பதை இலக்காக கொண்டு தற்போது வரை 69 லட்சத்து 93 ஆயிரத்து 493 பனை மர விதைகளை விதைத்துள்ளோம். பனை சார்ந்த உணவு பொருள் பதப்படுத்தலுக்கான மினி பூங்கா பணியினை செயல்படுத்தினால் சுமார் 5000 பேர் நேரடியாக சுய வேலை வாய்ப்பினைப்பெறுவார்கள். மேலும் தற்போது மாவட்டத்தில் குடும்ப வறுமையின் காரணமாக சிலர் பள்ளி, கல்லூரியை நிறுத்தி விட்டு பனைத்தொழில் செய்து வருகின்றனர் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென என்றார்.

பனைத்தொழிலாளி கூறும்போது, ‘அதிகாலை 3மணிக்கு பனை ஏறத்தொடங்கினால் தான் பனையை இடுக்கி பதநீர் எடுக்க முடியும். கடும் உடல் உழைப்பையும், தன்னம்பிக்கையும் கொண்ட தொழிலான பனைத்தொழில் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலுக்கு அரசு முக்கியத்துவம் வழங்கவேண்டும். ஏராளமான தொழிலாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தொழில் செல்ல தடை விதிக்கப்பட்டு அவர்கள் வேலைக்கு செல்லாமல் இருந்ததற்கு ஊதியத்தை அரசு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது. ஆனால் பனைத்தொழிலுக்கு எவ்வித மானியமும், ஊக்கத்தொகையும் அரசு வழங்கவில்லை. எனவே அரசு எங்கள் மனமிறங்கி பனைத்தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.

Related Stories: