சைவம், சமணத்தின் அடையாளம் சிங்கிகுளம் மலைக்கோவில்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டத்தி லுள்ள பச்சையாற்று வாழ்வியல் நாகரீகத்தில் சிங்கிகுளம், மிகவும் பழமையான கிராமம் ஆகும். ஈராயிரம் ஆண்டு பழமையான இந்த கிராமத்தில் விவசாயமே பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. இங்குள்ள சமண மலை மீது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண மடம் அல்லது சமணப்பள்ளி அமைந்துள்ளது. அதனுடன் பகவதி அம்மன் கோயிலும் இணைந்துள்ளது. விநாயகர், சப்த ரிஷி மற்றும் கன்னியர் வழிபாடும் உள்ளது. சமணர்கள் வழிபாட்டுக்கென தவ நிலையில் சமண முனிவர்களின் கற்சிற்பங்கள் தனியாக உள்ளன. தொன்று தொட்டு சைவத்தையும் சமணத்தையும் இங்குள்ள மக்கள் சேர்த்து வணங்கி வந்துள்ளனர். இது சமய நல்லிணக்கத்திற்கான மையமாக அப்பகுதியினரால் குறிப்பிடப்படுகிறது.

சமண மலை கோவில் கல்வெட்டுகளில் மானுடவியல்: சிங்கிகுளம் மலைக்கோவிலில் காணப்படும் பழம்பெரும் கல்வெட்டுகள் தமிழர்களின் பண்பாட்டு சான்றுகளாக அக்கால தென்னக மானுடவியல் பண்பாட்டு வாழ்வியல்களை உணர்த்துகிறது. இக்கோவிலின் மேற்குப்பகுதி சுவரில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் “பூ மருவி திருவும் பொருள் செய் மடந்தை” என்னும் மெய்க்கீர்த்தி செய்யுள்  முதன்மையானது ஆகும். கிபி 1254ம் ஆண்டு பாண்டிய மண்டலத்தை ஆட்சி செய்த மன்னன் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் இக்கல்வெட்டு எழுதப்பட்டது. வடக்கு சுவரில் எழுதப்பட்ட கல்வெட்டில் ‘கோனேரின்மை கொண்டான்’ என்ற பட்டப்பெயர் கொண்ட மாறவர்மன் குலசேகர பாண்டியனின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது.

இம்மலையில் உருவான சமண பள்ளிககு உதவும் வகையில் பள்ளிச்சந்தம் வழங்க பாண்டிய மன்னர்கள் முன் வந்துள்ளனர். சிங்கிகுளம் சமணமலையில் ஏராளமான சமணர்கள் மதத்தின் கொண்ட பற்றால் இல்லறம் துறந்து நிர்வாண நிலை அடைந்து ஊரை விட்டு ஒதுங்கி சமண மலைப்பாறை இடுக்குகளில் உள்ள குகைகளில் தங்கி வந்துள்ளனர். அவர்கள் தங்கிய பாழிகள் (படுக்கைகள்) பல மலை முழுவதும் காணக்கிடைக்கிறது. அங்கேயே தவம் செய்து இறைவனின் அருளை பெற முயன்றுள்ளனர். இருப்பினும் உயிர்வாழ தேவையான அடிப்படை உணவு, வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் என்பதை உணர்ந்த அக்கால பாண்டிய மன்னர்கள் சமண முனிவர்களுக்கு தானங்களையும் வாரி வழங்கியுள்ளனர்.

அதாவது இந்த மலையில் உள்ள சமண கோவில் எதிரே இருக்கும் குளமும் நஞ்சை புஞ்சை நிலங்களும் நீர் ஓடையும் அதில் கிடைக்கும் வருமானங்களும் நில பட்டா வகைகளும் வரிகளும் சமண மடத்திற்கு கொடுக்க ஆணையிட்டமையை இக்கோவில் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.மேலும் இவ்வூரில் மக்கள் அரசுக்கு செலுத்தும் சாலை வரி, பல்வேறு மனித இனங்களின் மீது விதிக்கப்பட்ட இனவரி, இடையர்கள் வளர்த்த கால்நடைகள் மீது விதிக்கப்பட்ட இடையர் வரி, நெசவாளர்களுக்கான நெசவுவரி உள்ளிட்ட பல்வேறு வரி வகைகளையும் இவ்வூரார் ஏற்படுத்திய ஊர் வரியையும், பசுவினங்கள் தரும் நல்கவ்வி எனும் பால், தயிர், நெய், உள்ளிட்ட பல்வேறு பால் சார்ந்த பொருட்களையும் வழிபாட்டிற்கு தேவையான பஞ்சு, மயில் பீலியையும் வழங்கவும் பாண்டிய மன்னன் ஆணையிட்டுள்ளான்.

இதன் முலம் சிங்கிகுளம் மலையில் வாழ்ந்த சமணர்களுக்கு உயிர் வாழ தேவையான அனைத்து வசதிகளும் மன்னன் மானியமாக வழங்கியதை இங்குள்ள கல்வெட்டுக்கள் பறைசாற்றுகின்றன என்பதை அறிய முடிகிறது. பாண்டிய நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் எழுதிய இந்த கல்வெட்டில் பிற்காலத்தில் மன்னன் குலசேகர பாண்டியனின் ஆட்சியில் சிறிய மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதாவது அந்த கால கிராம நிர்வாக அடிப்படையில் இராசராசபுரத்து (சிங்கிகுளம்) ஜினகிரி (வடமொழி) மாமலை என்னும் சமணமலை அருகிலுள்ள திடியூர் கிராம நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சமண பள்ளிக்காக வழங்கிய நிலமானது இக்கோவில் கல்வெட்டுக்களில் இராசராசபுரம் என்று அழைக்கப்பட்ட சிங்கிகுளம் கிராம நிர்வாகத்தின் கீழ் இருந்ததை தெரிவிக்கின்றன. இதனால் இராசராசபுரம் கிராம நிர்வாகத்தின் கீழ் வரும் வருவாயினங்களை திடியூர் கிராமத்தின் கீழ் இருக்கும் சமணப்பள்ளிக்கு பரிமாற்றம் செய்வதில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் இருந்தது தெரிகிறது.

இதனால் மலையிலுள்ள சமணர்களுக்கு வருமானம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் அப்பகுதியினர் பிற்காலத்தில் குலசேகர பாண்டிய மன்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றதால் குலசேகரபாண்டியன் மலையிலுள்ள சமணர்களுக்கு அரசு வழங்கிய உதவிகள் தடையின்றி கிடைத்திட சமணமலையை திடியூர் கிராமத்தில் இருந்து மாற்றி இராசராசபுரம் கிராம நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து இராஜராஜபுரம் மலை என மாற்றி அமைத்தான்  என்பது கல்வெட்டு செய்தி. இரு கிராமங்களுக்கும் இடையேயான நிர்வாக சிக்கல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் பாண்டிய மன்னர் தனிக்கவனம் செலுத்தி மலையில் இருக்கும் சமணபள்ளிக்கு தங்கு தடையின்றி வருமானத்தை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழர்களின் ஆட்சியியல் நிர்வாகத்திறமைக்கு இக்கல் வெட்டு அரிய சான்றாக விளங்குகிறது.

மழைநீர் சேகரிப்பும், நீர் மேலாண்மையும் சிங்கிகுளம் சமணமலையில் மழைநீரை சேகரித்து அவற்றை முறையாக மேம்படுத்தி ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் நுணுக்கத்தை அக்காலத்திலேயே தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர் என்பதற்கு இங்கு பல சான்றுகள் உள்ளன. இது குறித்து புலவன்குடியிருப்பு மனோன்மணியம் சுந்தரனார் உறுப்புக்கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் முனைவர் விக்டர்பாபு கூறுகையில்: இந்த மலையில் உள்ள இரண்டு பெரிய சுனைகள் ஆண்டு முழுவதும் நிலையாக தண்ணீர் வழங்கும் நீராதாரமாக உள்ளன. கோயிலுக்கு மேற்கிலும், வடகிழக்கிலும் அமைந்த இந்த இரு சுனைகளும் இந்த மலைக்கு வரும் பொதுமக்களின் நீர்தேவையை பூர்த்தி செய்கிறது. அதாவது இந்த இரு சுனைகளிலும் ஆழம் எவ்வளவு என்பது இன்று வரையிலும் கண்டறியப்படவில்லை சுமார் 3 அடி அகலமும் 30 முதல் 50 அடி நீளம் கொண்ட இந்த சுனைகள் தனித்தனியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயிலுக்கு மேற்கில் உள்ள சுனையானது கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வட கிழக்கிலுள்ள சுனை குடிநீராகவும் கோவில் உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த இரு சுனைகளில் உள்ள நீரானது மழை நீருடன் நிலத்தடி நீரும் சேர்ந்து இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்த சுனைகள் திறந்த வெளியில் இருப்பினும் அதில் காற்றில் அடித்து வரப்படும் தூசி, அழுக்குகள், சிறிய பூச்சி போன்ற சிறிய உயிரினங்கள் விழுந்தாலும் வெயிலின் வெப்பத்தால் இயற்கையாகவே அழிக்கப்படுகின்றன. இதனால் இந்த சுனைகளில் தேங்கும் மழை தண்ணீர் கடைசி சொட்டு இருக்கும் வரை அதன் தன்மையிலிருந்து கெட்டுப் போவதோ அல்லது துர்நாற்றமும் கொடிய விஷத்தன்மையையும் அடைவதில்லை என்பது இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மலை உச்சியில் பல இடங்களில் மழை நீரை சேகரிக்க பல சிறிய தொட்டி போன்ற இயற்கை பாறைப்பள்ளங்களில் சிறிய ஓடை போன்ற கோடுகளை உருவாக்கி அதன் வழியே வரும் நீரிலிருந்து அழுக்கு பாசிகள் போன்ற தேவையற்ற கழிவுகளை வடிகட்டிட இடையில் சிறிய வடிகட்டி குழிகளை உருவாக்கி அதன் வழியே பெரிய சுனைகளில் மழைநீர் சென்று சேரும் வகையில் நீரியல் சேகரிப்பு தொழில் நுட்பத்துடன் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அக்காலத்திலேயே தமிழர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.

பாறைகள் மேல் மழைநீர் சேகரிக்க பயன்படுத்தப்பட்ட சிறிய கல் தொட்டிகளை வெயில் காலங்களில் நீர் வறண்டதும் மூலிகை தாவரங்களை காயவைக்கும் பாத்திரமாகவும் சமணர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்வாறு காய வைக்கப்பட்ட மூலிகைகளை கொண்டு உள்ளூர் மக்களுக்கு இயற்கை சுனை நீரை பயன்படுத்தி மூலிகை மருந்துகள் தயாரித்து கொடுத்து நோய் கொடுமையை சமணர்கள் தடுத்து வந்துள்ளனர். மலையின் கிழக்கு பகுதியில் உள்ள சரிவில் அமைந்த ஒரு சுனை அப்பகுதி மக்களால் பால் சுனை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்த சுனை மழைக்காலங்களில் மட்டுமே உயிர் பெற்றிருக்கும் இந்த சுனையில் உள்ள நீர், பால் கலந்த தண்ணீர் போல இளம் வெண்மையாக காட்சியளிப்பதால் இதற்கு பால்சுனை என்று அழைக்கப்படுகிறது.

இந்த சுனைகளில் இருந்து நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மலையிலுள்ள இயற்கைச் சூழலில் கிடைக்கும் தண்ணீரை எடுத்துச் சென்று பரிசோதித்து அது தரமானதாகவும் மருத்துவ குணமிக்கது தான் என  அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க பழமையான சிங்கிகுளம் சமண மலைக்கோவில் நெல்லை மாவட்டத்தின் மிகப் பெரிய சமணர்களின் அடையாளச் சின்னமாகவும், பழந்தமிழர் பண்பாட்டு வாழ்வியல் பொக்கிஷமாகவும் உள்ளது. இந்த மலையை பாதுகாக்கப்பட்ட வரலாறு மற்றும் தமிழர் பண்பாட்டுச்சின்னங்களின் பட்டியலில் சேர்த்து பண்டைய தமிழர்களின் வாழ்வியலை உலகறியச் செய்திட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: