×

போதமலை கீழுரில் 6 கி.மீ., நடந்து சென்று பள்ளியை ஆய்வு செய்த சிஇஓ: கட்டிடம் பழுதால் சமுதாயக்கூடத்துக்கு மாற்ற உத்தரவு

நாமக்கல்: போதமலை கீழுரில் உள்ள அரசு பள்ளிக்கு முதன்முறையாக 6 கி.மீ., நடந்து சென்று சிஇஓ ஆய்வு செய்து பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதால் சமுதாய கூடத்துக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் ஒன்றியத்தில் உள்ளது போதமலை. அடிவாரத்தில் இருந்து போதமலை 6 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. கரடுமுரடான மலைப்பாதையை கடந்து தான் போதமலைக்கு செல்ல வேண்டும். சரியான சாலை வசதி கிடையாது.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் வெண்ணந்துார் அடிவார பகுதியில் குடியேறிவிட்டனர். போதமலையில் உள்ள கீழுர் மற்றும் மேலுார் என இரண்டு கிராமங்களில் அரசு பள்ளிகள், ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு, பொருட்களை தலைச்சுமையாகத் தான் எடுத்துச் செல்ல வேண்டும். தேர்தல் நேரத்தில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வருவாய்த்துறை ஊழியர்களால் தலைச்சுமையாக கொண்டு செல்லப்படும். இங்குள்ள அரசு பள்ளிகளை கல்வித்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றால் அடிவாரத்தில் இருந்து 6 கி.மீ., நடந்துதான் செல்ல வேண்டும்.

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சுமார் 23 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இந்த மலை கிராமத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சென்றது கிடையாது. முதன் முறையாக, நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, வெண்ணந்தூர் வட்டார கல்வி அலுவலர் வளர்மதி, பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மலை கிராமத்துக்கு சுமார் 6 கி.மீ., தூரம் நடந்து சென்றனர். போதமலை கீழுரில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டுஉறைவிட துவக்கப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

இந்த பள்ளியில் 1ம் வகுப்பில் குழந்தைகள் இல்லை. 2, 3, 4 மற்றும் 5ம் வகுப்பில் தலா ஒரு குழந்தைகள் என மொத்தம் 4 குழந்தைகள் மட்டும் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சிவகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மலை கிராமத்திலேயே தங்கியிருந்து குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கற்றல் திறனை முதன்மைக் கல்வி அலுலவர் மகேஸ்வரி ஆய்வு செய்தார். பின்னர், குழந்தைகளுக்கு நல்ல முறையில் கல்வி கற்பிக்கும்படி தலைமை ஆசிரியரை கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறுகையில், மலை கிராமத்தில் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வருகிறார்கள்.பெரும்பாலான பெற்றோர்கள் அடிவாரத்தில் வசிப்பதால், அங்குள்ள பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்துள்ளனர். மலை கிராமத்தில் உள்ள பள்ளி கட்டிடம் கடந்த 72ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். அது இடிக்கப்படணே்டிய கட்டிடமாகும். இதுகுறித்து அரசுக்கு கடிதம் அனுப்பப்படும். புதிய கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக அருகில் உள்ள சமுதாயக்கூடத்துக்கு பள்ளியை மாற்றும்படி தலைமை ஆசிரியரை அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.


Tags : Bothamalai Keedurar ,CEO , CEO who walked 6 km below Bothamalai and inspected the school: The building is dilapidated. Transfer order to community center
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி...