வால்பாறை நகர மக்கள் தாகம் தணிக்க ரூ.4 கோடியில் மூன்றாம் குடிநீர் திட்டம்; நகராட்சி அதிகாரிகள் தீவிரம்

வால்பாறை:  ரூ.4 கோடியில் பிரமாண்ட 3ம் கட்ட குடிநீர் திட்டம் மூலம் வால்பாறை நகர மக்கள் தாகம் தணிக்க நகராட்சி அதிகாரிகள் மும்முரமாக களம் இறங்கியுள்ளனர். வால்பாறை நகரத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது அக்காமலை குடிநீர் திட்டம். 1984ம் ஆண்டு முதல் புவி ஈர்ப்பு சக்தி மூலம் மின் மோட்டார் இல்லாமல் செயல்பட்டு வருவது தான் இந்த முதல் கட்ட திட்டத்தின் சிறப்பம்சம். இதையடுத்து, 2ம் கட்ட திட்டத்தில் கடந்த 2013ம் ஆண்டு புதிய இரும்பு குழாய் பதித்து தீவிரமாக  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, கருமலை எஸ்டேட்டில் உள்ள தடுப்பணையில் இருந்து சுமார் 11 கிமீ நீளத்திற்கு, சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு தடுப்பணையில் இருந்து குடிநீர் வால்பாறைக்கு கொண்டு வரப்படுகிறது. வால்பாறை கோ.ஆப். காலனியில் சமமட்ட தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு, தினசை சுமார் 8 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கோ.ஆப். காலனி, மெயின் ரோடு, அண்ணா நகர், கக்கன் காலனி, இந்திரா நகர், காமராஜ் நகர், துளசிங்க நகர், எம்ஜிஆர் நகர், வாழைத்தோட்டம், நகராட்சி குடியிருப்பு, சிறுவர் பூங்கா, குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  வீடுகள், கடைகள் என 1700 குடிநீர் இணைப்புகளும், 20க்கும் மேற்பட்ட பொது இணைப்புகளும் குடிநீர் பெற்று வருகிறது.

வால்பாறையில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் சூழலில், குடிநீர் தேவைகளும் மேலும் அதிகரித்து உள்ளது. வால்பாறை மலை பகுதி என்பதால் ஆழ்துளை கிணறு அமைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, வியாபாரிகள், ஓட்டல் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரையே நம்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து, நாளுக்குநாள் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காகவும் 3ம் கட்ட குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக, வால்பாறை கோ.ஆப். காலனியில் பழைய சம மட்ட தண்ணீர் தொட்டிகளை உடைத்துவிட்டு, அதே இடத்தில் 2 புதிய சமமட்ட தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன.

2 லட்சம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவிற்கு 2 பிரமாண்ட தொட்டிகள் ரூ.80 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ளது. 3ம் கட்ட குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய, புதிய குழாய்கள் கருமலையில் உள்ள தடுப்பணையில் இருந்து பதிக்கப்படுகிறது. இதுசம்பந்தப்பட்ட கோப்புகள் அரசு ஒப்புதலுக்கு சென்ற நிலையில் தற்போது ஒப்புதல் பெற்று, ரூ.4 கோடி மதிப்பில் பணிகள் விரைவில் துவங்குகிறது. இப்பணிகள் துரிதமாக தொடங்கி பூர்த்தி அடைந்தால் கருமலை தடுப்பணையில் இருந்து வீணாகும் பல கன அடி தண்ணீர் வால்பாறை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பெரிதும் உதவும். எனவே, விரைவில் குடிநீர் குழாய்கள் பதித்து, வால்பாறை டவுனில் குடிநீர் விநியோக நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதும், வால்பாறை நகர மக்கள் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: