திமுக ஆட்சியால் மீண்டும் புத்துயிர் பெறுகிறது... காரியாபட்டியில் உருமாறும் உழவர் சந்தை

காரியாபட்டி: திமுக ஆட்சியால், காரியாபட்டியில் உள்ள உழவர் சந்தைக்கு புத்துயிரூட்டும் பணிகள் நடந்து வருகின்றன. வியாபாரம் செய்ய சாலையோர வியாபாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என உழவர் சந்தை வேளாண்மை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதி முழுவதும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்நகர் அருகே, ஆவியூர், அரசகுளம், குரண்டி, எஸ்.கல்லுப்பட்டி, சீகனேந்தல், முஸ்டக்குறிச்சி, சொக்கனேந்தல், மறைக்குளம், தோப்பூர், சித்துமூன்றடைப்பு, கழுவனச்சேரி, தோணுகால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் அதிகமாக காய்கறி பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியில் விளையும் காய்கறிகளை மதுரை காய்கறி மார்க்கெட்டுக்கு அனுப்பி விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில், காரியாபட்டியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என காரியாபட்டி வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. சந்தை தொடங்கி சில ஆண்டுகள் மட்டும் காய்கறி விற்பனை நடந்தது. பின் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சியில் உழவர் சந்தை செயல்படாமல் முடங்கியது. இதை தொடர்ந்து காரியாபட்டி பஸ்நிலையத்தை சுற்றிலும், சாலை ஓரங்களில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டன.

இதனால், பொதுமக்கள் காய்கறி வாங்க உழவர் சந்தைக்கு வரவில்லை. இதனால், உழவர் சந்தையில் விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள் விற்பனையாகவில்லை. இதனால், விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி விற்பனை செய்ய வரவில்லை. இந்நிலையில், அருப்புகோட்டை-மதுரை சாலையில் அன்றைய அதிமுக பேருராட்சி நிர்வாகம், யூனியன் ஆபீஸ் வீதி சாலையோரங்களிலும் கடைகள் அமைக்க வியாபாரிகளுக்கு அனுமதி அளித்தனர். இதனால், உழவர் சந்தையில் வியாபாரம் குறைந்தது. விவசாயிகளும் சாலையோரங்களில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

இதனால், உழவர்சந்தை முடங்கியது. உழவர்சந்தையை புத்துயிரூட்டி நடத்தக்கோரி அதிமுக பேரூராட்சி நிர்வாகத்திடம், பல முறை உழவர் சந்தை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சி அமைந்ததால், உழவர் சந்தைக்கு புத்துயிரூட்டும் பணிகள் நடந்து வருகின்றன. உழவர் சந்தையில் மராமத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில், வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்க பேரூராட்சி நிர்வாகம் குத்தகைக்கு விட்டது. நகரில் தினசரி 125க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்படுகின்றன. தலா ரூ.10 வீதம் தினமும் ரூ.1,500 வரை வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் பாதிக்காமல் இருக்கவே, உழவர் சந்தையை முடக்கினர்.

தற்போது திமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பல கட்ட முயற்சிக்கு பின் தற்போது உழவர் சந்தையில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளுடன் 24 கடைகள் உள்ளன. கடை நடத்த 23 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகள் விற்பனை செய்ய ஏதுவாக உழவர் சந்தையை மராமத்து பார்த்து புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சாலையோர கடை வியாபாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, விரைவில் உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய உள்ளனர் என உழவர் சந்தை வேளாண்மை அலுவலர்கள் ரியாஸ் அகமது, கருப்பத்தேவன் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories: