வேளாங்கண்ணியில் கடலில் குளிக்கும் போது ஏற்படும் உயிர் இழப்பு தடுக்க நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் கடலில் குளிக்கும் போது ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க நிரந்தர தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களாக நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகியவை உள்ளது. இதில் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் பகுதியில் நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. இதனால் வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வேளாங்கண்ணி பேராலயம் வந்தால் கடற்கரை சென்று குளிக்காமல் திரும்பமாட்டார்கள்.

இதனால் வேளாங்கண்ணி கடற்கரையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்து இருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டு பெரு விழா ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். மேலும் ஆங்கில புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும், தவக்காலத்தின் போதும் வேளாங்கண்ணியில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். முக்கிய விடுமுறை நாட்களிலும் அதிக அளவில் கூட்டம் காணப்படும். இந்த நாட்களில் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்வார்கள்.

இவ்வாறு மகிழ்ச்சியாக கடலில் குளிக்கும் போது சோகமான நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடலில் குளிப்பவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது. இதனை தடுக்க அங்குள்ள தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழுவினர் நூற்றுக்கு மேற்பட்டோரை காப்பாற்றி உள்ளனர். ஆனால் இதுவரை 5 ஆண்டுகளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் பலியை தடுக்க முடிவதில்லை. 2018ல் 5 பேரும் 2019-ம் ஆண்டில் 13 பேரும், 2020-ம் ஆண்டில் 8 பேரும், 2021-ம் 9 பேரும் 2022 ஆண்டில் 9 பேரும் இதுவரை 5 ஆண்டுகளில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் பேராலய விழா காலங்களில் கடலில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது..இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடலில் மூழ்கி ஏற்படும் உயிர் பலியை தடுக்க வேளாங்கண்ணி கடற்கரையில் 700 மீட்டர் நீளத்திற்கும், 200 மீட்டர் அகலத்திற்கு நிரந்தரமாக இரும்பு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோர காவல் குழும போலீசார் மற்றும் காவல்துறையினர் போதுமான அளவு நியமிக்க வேண்டும். கடலில் குறிப்பிட்ட தூரத்திற்குள் எல்லையை வகுக்க வேண்டும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். தன்னார்வ அமைப்புகளுக்கு தேவையான படகு,ஒலிபெருக்கி முதல் உதவி செய்யும் லைப் ஜாக்கெட் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும் என கூறுகின்றனர்.

Related Stories: