அடிப்படை வசதியில்லாத மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்: பயணிகள் கடும் அவதி

ராமநாதபுரம்: தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான தனுஷ்கோடியில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு கடந்த 1914 பிப்.24ம் தேதி மீட்டர் கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. இங்கிருந்து இயங்கிய போர்ட் மெயில் ரயில் பயணிகள் இலங்கை வரை சென்று வர ரயில்வே கவுன்டர்களிலேயே டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த ரயிலுக்கு மண்டபம் ரயில்வே அருகே உள்ள இன்ஜின் ஷெட்டில் நிலக்கரி நிரப்பவும், ரயில் பெட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் வசதி, ஓடும் தொழிலாளர்கள் ஓய்வறை, முதுநிலை கோட்ட பொறியாளர், இருப்பு பாதை ஆய்வாளர், பணி ஆய்வாளர் அலுவலகங்கள் இருந்தன. மேலும், பாம்பன் சாலை வழி இன்மையால் சுற்றுலா பேருந்துகளில் வரும் வடமாநில பயணிகள் தங்கள் வாகனங்களை மண்டபம் பகுதியில் நிறுத்தி விட்டு செல்லும் வசதி இருந்தது. பயணிகள் நலன் கருதி ரயில்வே கேன்டீன், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இருந்தன.

கடந்த 1988 அக்டோபர் 2ல் பாம்பன் சாலை போக்குவரத்து தொடங்கியதையடுத்து, மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் வசதிகள் ஒவ்வொன்றாக குறையத் தொடங்கின. தற்போது எந்த வசதியுமின்றி ரயில்கள் வந்து செல்லும் ஸ்டேஷன் ஆக மட்டுமே உள்ளது. தற்போது இங்கு சென்னை, திருப்பதி, ஓகா, கோவை, திருச்சி, மதுரை ரயில்கள் நின்று செல்கின்றன. இங்கு கழிப்பறை வசதி, முன்பதிவு மையம் அமைத்து தர வேண்டும் என நகர் வர்த்தக சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் வட மாநில தொலை நேர ரயில்கள், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை- ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த காலங்களை போல் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் நல சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி உள்ளிட்ட பிரதான ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. இவற்றில் அதிக பரப்பு இடங்களை உள்ளடக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் மண்டபம் ஸ்டேஷன் பிரதானமாக உள்ளது.

இங்கு ஒரு கி.மீ தூரத்திற்கு ரயில்வே இடம் விரிந்து பரந்துள்ளது. பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பால் ரயில் சேவை நிறுத்தப்படும்போது மண்டபம் ஸ்டேஷனில் இருந்து தான் இதர நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கேற்ப 3 ரயில் பாதைகள் உள்ளடக்கிய பரந்த நிலம் உள்ளது. தற்போது ரூ.250 கோடி மதிப்பிலான பாம்பன் ரயில் புதிய பாலம் கட்டுமான பணிக்கான சிமென்ட் கலவை தயாரிப்பு, தண்டவாளம் அமைப்பதற்கான இரும்பு கர்டர்கள் பற்றவைப்பு பணிகள் மண்டபம் ரயில் நிலத்தில் குவிக்கப்பட்டு சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன.இந்நிலையில், மண்டபம் ரயில்வேகேட் அருகே தென் பகுதி காலி நிலம் மதுப்பிரியர்களின் திறந்த வெளி பாராகவும், வடக்கு பகுதியில் காலியாக உள்ள இடம் குப்பை கூடமாக உள்ளது. வடக்கு பகுதி காலி 3 சென்ட் நிலம் முற்றிலும் இறைச்சி கழிவுகளின் கூடாரமாக திகழ்கிறது. இங்கு தினம் குவிக்கப்படும் கோழி இறைச்சி கழிவுகளை இரையாக்கி கொள்ள நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாய்கள் கூடுகின்றன.

இக்கழிவுகளை திண்ணும் நாய்கள் தற்போது வெறிநாய்களாக மாறி கூட்டம், கூட்டமாக தெருக்களில் சுற்றித்திரிகின்றன. இதனால் குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர். மேலும், இறைச்சி கழிவுகளில் இருந்து வெளியேறும் துர்நாற்ற மிகுதியால், எதிரே உள்ள கடைகாரர்கள் அவதியடைந்துள்ளனர். இக்கழிவுகளை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தினமும் அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் கோழி இறைச்சி கழிவுகள் கிலோ கணக்கில் குவிக்கப்பட்டு நாய்களின் இரைக்கூடமாக மாறி விடுகிறது. பொதுமக்கள் கூறுகையில், ரயில் தண்டவாளங்களில் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இதை கண்டு கொள்வதில்லை. ரயில்வே சுகாதார பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் தான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றனர்.

Related Stories: