×

ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய துணை நடிகை தற்கொலை முயற்சி; 4 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து எஸ்கேப்

திண்டுக்கல்: ரூ.30 லட்சம் மோசடி புகாரில் சிக்கிய திண்டுக்கல்லை சேர்ந்த துணை நடிகை திவ்யபாரதி, கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஜிஹெச்சில் சிகிச்சையில் இருந்த அவர் 4 மணி நேரத்தில் தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் பகலவன் ராஜா. இவர் யூடியூப் சேனல் நடத்தி அதில் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பை சேர்ந்த சினிமா துணை நடிகை திவ்யபாரதியை (24) நடிக்க வைத்து, தனது கவிதை தொகுப்புகளை வெளியிட்டார். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. திவ்யபாரதி திருமணத்தை தள்ளி போட்டதோடு, பல்வேறு காரணங்களை கூறி ரூ.30 லட்சத்துக்கு பணம், தங்க நகைகள் மற்றும் பர்னிச்சர்களை, அவரிடம் இருந்து வாங்கியதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் சந்தேகமடைந்து அவரை பற்றி பகலவன் ராஜா விசாரித்தபோது, ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளது தெரிய வந்தது.

இதுபற்றி அவர் திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தாடிக்கொம்பில் தனது வீட்டில் இருந்த திவ்யபாரதி, கொசு மருந்து குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் பெற்றோர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சென்று தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தினர்.‘‘பகலவன் ராஜா மீது நான் கொடுத்த புகார் குறித்து போலீசார் கண்டுகொள்ளவில்லை. என்னிடம் மட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், கொசு மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன்’’என்று போலீசாரிடம் திவ்யபாரதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நள்ளிரவு 12 மணியளவில் ஜிஹெச்சில் இருந்து திவ்யபாரதி மாயமாகி விட்டார்.

Tags : Supporting actress caught in Rs 30 lakh fraud case attempted suicide; Escape from the government hospital in 4 hours
× RELATED யானை தாக்கி விவசாயி பலி