கள்ளக்காதலால் குடும்ப தகராறு என்எல்சி ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை; மகளின் காதலனுடன் சேர்ந்து மனைவியே வெறிச்செயல்

நெய்வேலி: நெய்வேலியில் கள்ளக்காதலால் ஏற்பட்ட குடும்ப தகராறில் என்எல்சி ஊழியரை சரமாரி வெட்டிக் கொன்ற மனைவி, மகளின் காதலனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (50). என்எல்சி முதலாவது சுரங்கத்தில் சுகாதார பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சகிலா(46) என்கிற நிர்மலா. இவர்களின் மூத்த பெண் சித்ரா, எம்பிபிஎஸ் முடித்து ஆந்திராவில் பணியாற்றி வருகிறார். பிரேம் நாராயணன்(17), 2வது மகள் பிரியங்கா(17), இரட்டையர்களான இருவரும் பாட்டி வீடான சேலத்தில் தங்கி நாமக்கல் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் சண்முகம் நேற்று அதிகாலை சரமாரி வெட்டி கொல்லப்பட்டு கிடந்தார். இதுபற்றி நெய்வேலி நகர போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: என்எல்சி ஊழியரான சண்முகம், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.

சம்பள பணத்தை அந்த பெண்ணுக்கே செலவு செய்துள்ளாராம். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த சகிலா, சண்முகத்தை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், 2வது மகளின் காதலனான என்எல்சி ஊழியர் தங்கப்பன் மகன் தமிழ்வளவனை நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டுக்கு அழைத்துள்ளார் சகிலா. கணவனின் கள்ளக்காதலால் எனது வாழ்க்கை சீரழிந்து விட்டது. அவரை கொன்று விட்டால் மகளை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என அவரிடம் சகிலா ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் சேர்ந்து சண்முகத்தை வெட்டி கொன்றுள்ளனர் பின்னர் தமிழ்வளவன் தப்பி விட்டார். சகிலா, வீட்டின் எதிர்புறம் நின்ற தங்கள் ஆம்னி காரில் தூங்கிவிட்டார். பின்னர் யாருக்கும் எதுவும் தெரியாதது போல் சகிகலா நேற்று அதிகாலை கதவை திறக்க முடியவில்லை எனக்கூறி தாழ்ப்பாளை உடைத்து திறந்து பார்த்து கணவனை யாரோ வெட்டி கொன்றுவிட்டார்கள் என கதறி அழுது நாடகம் ஆடியது தெரியவந்தது. இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து கொலை வழக்கு பதிந்து சகிலா, தமிழ்வளவன் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: