எனது அறக்கட்டளைக்கு அனுப்பிய பணம் எவ்வளவு? பாடலாசிரியர் சிநேகன் மீது நடிகை ஜெயலட்சுமி புகார்

சென்னை: எனது அறக்கட்டளைக்கு யாரோ பணம் அனுப்பியதாக கூறும் சிநேகன், அந்த பணம் யாருடையது, எவ்வளவு பணம் என்று கூற வேண்டும் என போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஜெயலட்சுமி புகார் அளித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகையும், பாஜக மாநில மகளிர் அணி துணை தலைவராக உள்ள ஜெயலட்சுமி நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2018ம் ஆண்டு முதல் சிநேகம் அறக்கட்டளை என்கிற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து தொடர்ந்து பல்வேறு மக்கள் நல பணிகளை செய்து வருகிறேன். இந்நிலையில், கடந்த 5ம் தேதி பாடலாசிரியர் சிநேகன் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் நான் பண மோசடி செய்திருப்பதாகவும், என் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், மேலும் பலரை மயக்கி நான் எனது கணக்குக்கு சிநேகனுக்கு செல்ல வேண்டிய பணத்தை மோசடி செய்து விட்டதாகவும், பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும், நான் எனது சிநேகம் அறக்கட்டளை 2018ம் ஆண்டு பதிவு செய்தது முதல் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறேன். எனது சிநேகம் அறக்கட்டளை சார்பில் பான் கார்டு மற்றும் முறையாக கணக்கு வைத்துள்ளேன்.

இந்நிலையில் இணையதளம் ஆரம்பிக்க சென்ற பொழுது அதே பெயரில் எனது சிநேகம் அறக்கட்டளை இணையதளம் உள்ளதை பார்த்து சிநேகன் உடனே இப்படி அடிப்படை ஆதாரமற்ற புகாரை என் மீது கொடுத்துள்ளார். மேலும், எளிதில் அணுக்கூடிய என்னிடம், இதை பற்றி தெரிவிக்காமல், தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும், சிநேகன் மேலாளர் என்னிடம் பேசியதாகவும் கூறியது எல்லாம் முற்றிலும் பொய்யானது.

சிநேகன், ஒரு பெண் என்று பாராமல் பொது வெளியில் இதுவரை எந்தவித குற்ற வழக்குகளும் இல்லாத என்னை பற்றி கேவலமாகவும், அவதூறு பரப்புகின்ற வகையில் பேசியது நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.  மேலும், சிநேகன் ‘சிநேகம்  பவுண்டேஷன் என்ற பெயருக்கு ஏதேனும் காபி ரைட் வாங்கி இருக்கிறாரா என்பது தெரியவில்லை. தனக்கு வர வேண்டிய பணம் எனது அறக்கட்டளைக்கு அனுப்பிவிட்டதாக யாரோ புகார் சொன்னதாக கூறியுள்ளார் சிநேகன். அந்த பணம் யாருடையது என்பதையும், எவ்வளவு பணம் என்பதையும் கூற அவர் கடமைப்பட்டுள்ளார்.

வேண்டும் என்றே அடிப்படை ஆதாரமில்லாமல் பொய்யான ஒரு புகாரை அளித்து எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி பொது வெளியில் அவமரியாதையாகவும், அவதூறாகவும், மிரட்டும் வகையில் பேசிய பாடலாசிரியர் சிநேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

Related Stories: