ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்த முயற்சி: கீழே குதித்து தப்பினார்

தண்டையார்பேட்டை: ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் புது வண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுதாரித்துக்கொண்ட சிறுமி கீழே குதித்து தப்பினார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி, தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி, தினசரி ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை ஷேர் ஆட்டோவில் சிறுமி பள்ளிக்கு புறப்பட்டார். அப்போது, ஆட்டோவில் 2 பேர் இருந்துள்ளனர்.

சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவில் இருந்த 2 பேர் திடீரென சிறுமி முகத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்த முயன்றுள்ளனர். சுதாரித்துக்கொண்ட சிறுமி அலறி கூச்சலிட்டுள்ளார். அப்போது, அவர்கள் சிறுமி வாயை பொத்தி, கடத்த முயன்றனர். உடனே, சிறுமி ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே, ஆட்டோவுடன் அதில் இருந்த 2 மர்ம நபர்கள் தப்பினர். கீழே விழுந்ததில், சிறுமிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அவளை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் வானமாமலை வழக்கு பதிந்து, சிசிடிவி பதிவுகள் மூலம் எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சார்லஸ் (49) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். தப்பி ஓடிய இரண்டு பேர் பிடிபட்டால் தான் உண்மை தெரியவரும் என்று போலீசார் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Related Stories: