அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு  உயர் நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணைக்கு வரவுள்ளது. ஜூலை  11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து கட்சி ஒருங்கிணைப்பாளர்  என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் என்ற முறையில்  வைரமுத்துவும் தொடர்ந்துள்ள வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும்  விசாரித்து 2 வாரங்களில் தீர்வு காண வேண்டும் என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

அதன்படி,  இந்த வழக்குகள் ஏற்கனவே நீதிபதி கிருஷ்ணன் முன்பாக விசாரணைக்கு வந்தது.  அவர் ஏற்கனவே 2 முறை இந்த வழக்கை விசாரித்து அதிமுக பொதுக்குழுவுக்கு தடை  விதிக்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டதால், புதிதாக வேறு ஒரு நீதிபதியை  நியமிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரப்பட்டது.

இதையடுத்து,  இந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டுமென தலைமை நீதிபதியே முடிவு செய்ய  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு  பரிந்துரை செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.  

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்குகள்  நேற்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன்  ஆஜராகி, இந்த வழக்கில் டெல்லி மூத்த வழக்கறிஞர்  ஆஜராக இருப்பதால்  விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென்று கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி  நாளை (இன்று) மதியம் விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

Related Stories: