சிகிச்சைக்காக 976 நாட்கள் விடுமுறை எடுத்த தலைமை காவலருக்கு மீண்டும் பணி

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக 976 நாட்கள் விடுமுறை எடுத்த தலைமை காவலரை மீண்டும் பணியில் சேர்க்குமாறு தமிழக காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை காவலர் சி.ஜெகதீசன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழக போலீசில் தலைமை காவலராக பணியாற்றி வந்தேன். கடந்த 2009 மே 22ம் தேதி பணியில் இருந்தபோது எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். தொடர்ந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தேன். எனது விடுமுறைக்கான மருத்துவ சான்றுகளை சம்பந்தப்பட்ட எஸ்பியிடம் தாக்கல் செய்தேன். அதை பரிசீலித்த எஸ்.பி எனது விடுப்பு காலத்திற்கு ஒப்புதல் அளித்து 2012 ஏப்ரல் 3ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

 தொடர்ந்து மருத்துவ குழுவில் ஆஜராகி பணியில் சேருவதற்கான மருத்துவ தகுதி சான்று பெற்றேன். இதை தொடர்ந்து எனக்கு துறை 2 முறை குற்றச்சாட்டு மெமோ அனுப்பியது. அதற்கு பதில் அளித்தேன். இந்நிலையில் என்னை பணி நீக்கம் செய்து 2012 டிசம்பரில் துறை உத்தரவு பிறப்பித்தது. பணி விடுப்புக்கான ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் என்னை பணி நீக்கம் செய்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, என்னை மீண்டும் பணியில் சேர்க்குமாறு உத்தரவிட வேண்டும்,’’ என்று கோரி இருந்தார்.

 

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் 976 நாட்கள் பணிக்கு வராததால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்திருந்தாலும் அதற்கு சம்பந்தப்பட்ட எஸ்.பி. ஒப்புதல் தெரிவித்து உத்தரவிட்டுள்ளார். எனவே அவரை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. விடுமுறை காலத்திற்கான பணப்பலன்கள் இல்லாமல் அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: