கருங்குழியில் திடக்கழிவு பணிகளை மேம்படுத்திட 7 பேட்டரி ரிக்‌ஷாக்கள்

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் திடக்கழிவு பணிகளை மேம்படுத்திட, 7 பேட்டரி ரிக் ஷாக்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. அதன் வெள்ளோட்ட நிகழ்ச்சி பேரூராட்சி வளாகத்தில் நடந்தது. தமிழக அரசின் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் மூலமாக மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில்  ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேம்படுத்திட 7 பேட்டாரி ரிக் ஷாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் வெள்ளோட்டம் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ஜி.தசரதன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மா.கேசவன் முன்னிலை வகித்தார். ஏற்கனவே, இந்த பேரூராட்சி 18 பகுதிகளாக பிரிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது, இந்த பேரூராட்சிக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் தூய்மை பணிகளை வேகமாக செயல்படுத்த முடியும்.

எனவே, தற்போது பேரூராட்சி தூய்மை பணிகள் 9 பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது. 1,9,10,11,12 வார்டுகளில் உள்ள வீடுகள் தோறும் சேகரமாகும் மக்கும் கழிவுகள் அப்பகுதியிலே உரமாக்கல் செய்யப்படும். மக்காத கழிவுகள் மேலவலம்பேட்டையில் உள்ள வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு வந்து தீர்வு செய்யப்படும். வார்டு 2,3,4,5,6 பகுதியில் வீடுகள் தோறும் சேகரிக்கபடும் மக்கும் கழிவுகள் வளம் மீட்பு பூங்காவில் கொண்டு வந்து மக்கவைத்து மண்புழு உரம் தயாரிக்கப்படும். வார்டு 7,8,13,14,15 ஆகிய வார்டுகளில் சேகரமாகும் மக்கும் கழிவுகள் கசடுகழிவு மேலாண்மை நிலையத்தில் உலர்ந்த கசடுவுடன் 1:3 விகிதத்தில் கலக்கப்பட்டு கலப்பு உரம் தயாரிக்கப்படுகிறது. இதனை கொண்டு மாட்டு தீவன புல் வளர்க்கப்படுகிறது. மக்காத கழிவுகள் வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு சென்று தீர்வு செய்யப்படுகிறது. இந்த பேரூராட்சியானது, தற்போது தமிழக அளவில் முன் மாதிரி பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: