×

நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம்; மனைவி கழுத்தை நெரித்து கொன்று மாயமானதாக நாடகமாடிய கணவன்: போலீஸ் விசாரணையில் சிக்கினார்

திருவொற்றியூர்: நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, மாயமானதாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். மணலி எம்ஜிஆர் நகரில் புதிய மேம்பாலம் கட்டும் பகுதி அருகில், நேற்று முன்தினம் காலை அழுகிய நிலையில் ஒரு பெண் சடலம் கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள், மணலி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், சடலமாக கிடந்தது திருவொற்றியூர் பூங்காவனபுரம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரின் மனைவி மைதிலி (38) என்பதும், இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி செய்து வந்ததும் தெரிந்தது.

தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மைதிலிக்கும், திருவொற்றியூரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, வெளியில் பல இடங்களில் பைக்கில் சுற்றித் திரிந்துள்ளனர். இதுபற்றி அறிந்த மணிமாறன், தனது மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் சந்திப்பில் மணிமாறன் நின்று கொண்டிருந்தபோது, அவரது மனைவி மைதிலி ஜெய்சங்கருடன் பைக்கில் வந்து இறங்கியுள்ளார்.

இதை பார்த்த மணிமாறன், இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இனிமேல் என் மனைவியோடு உன்னை பார்த்தால் தொலைத்து விடுவேன் என்று ஜெய்சங்கரை எச்சரித்துள்ளார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்த மணிமாறன், தனது மனைவி மைதிலியை 2 நாட்களாக காணவில்லை, என்று புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், எம்ஜிஆர் நகர் மேம்பால பகுதியில் மைதிலி உடல் அழகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். மேலும், கடந்த 3ம் தேதி மணிமாறன் தனது மனைவி மைதிலியை பைக்கில் இந்த பாலம் வழியாக அழைத்து சென்றதை அப்பகுதியில் இருந்த சிலர் பார்த்துள்ளனர். எனவே, மணிமாறனை மணலி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: மைதிலி வேறொரு நபருடன் பழகி வந்ததால், நடத்தையில் சந்தேகமடைந்து அவரை கண்டித்தேன். ஆனாலும் அவர்கள் தொடர்பை துண்டிக்கவில்லை. இதனால், மைதிலியை மேம்பாலத்திற்கு அருகில் அழைத்து சென்று, கழுத்தை நெறித்து கொன்று விட்டு, வீட்டிற்கு வந்துவிட்டேன். பின்னர், அவர் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தேன். ஆனால், போலீசார் மாட்டிக்கொண்டேன். என தெரிவித்துள்ளார். அவரை கைது செய்தனர்.



Tags : perverted by doubt in conduct; Husband who strangulated his wife to death and acted mysteriously: caught up in police investigation
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...