குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து விமான நிலைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; ஏகனாபுரம் கிராம மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து விமான நிலைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என ஏகனாபுரம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 12 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் புதிதாக பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக ஒன்றிய, மாநில அரசுகளின் அறிவிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. விமான நிலையம் அமைய உள்ள 12 கிராமங்களும் நன்செய் நிலங்கள் நிறைந்த விவசாய பூமி. இப்பகுதி மக்கள் விவசாயத்தையே முதன்மை தொழிலாக செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பகுதியில் பல ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் நீரோடைகள் உள்ளன.

இந்த பகுதியில் விமான நிலையம் அமைப்பதால் பரம்பரையாக வேளாண் தொழில் செய்துவரும் விவசாயிகளின் உயிர் மூச்சை நிறுத்தும் செயலாக அமையும். மேலும், 12 கிராமங்களில் விமான நிலையத்திற்காக வரையறுக்கப்பட்ட இடத்தில் ஏகனாபுரம் கிராமத்தில் நன்செய் நிலங்களுடன் 600 குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியும் அடங்கி உள்ளது. புதிதாக அமைய உள்ள நிலையப் பணிக்காக வேறு வழியின்றி எங்களின் பலநூறு ஏக்கர் நிலங்களை உரிய இழப்பீடு பெற்றுக்கொண்டு தர தயாராக இருந்தாலும் குடியிருப்புப் பகுதிகளை இழக்க நாங்கள் தயாராக இல்லை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் ஒரு ஊராட்சியை அழித்து, மற்றொரு திட்டத்தை நிறைவேற்றுவது எங்கள் மனங்களையும், பண்பாட்டையும் சீரழிப்பதாக அமையும். எனவே, எங்களின் உணர்வுகளையும், வாரிசுகளின் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு, ஏகனாபுரம் கிராம மொத்த பரப்பில் 950 ஏக்கரில் உள்ள குடியிருப்புப் பகுதி 50 ஏக்கரை மட்டும் விடுவித்து விமான நிலைய திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம். இவ்வாறு மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: