காவல் நிலையத்தில் வாலிபர் விக்னேஷ் மரண வழக்கு; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் 6 போலீசாருக்கு சட்டப்பூர்வ ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போலீஸ் விசாரணையின்போது வாலிபர் விக்னேஷ் மரணமடைந்த வழக்கில் 90 நாட்கள் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் வழக்கில் கைதான போலீசார் 5 பேர் உள்ளிட்ட 6  பேருக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷை கடந்த ஏப்ரல் 18ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலைய போலீசாரால், விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், மறுநாள் மர்மமான முறையில் அவர் காவல் நிலையத்தில் உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் குறித்த சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் தலைமை செயலக காலனி சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குமார், முனாப், காவலர் பவுன்ராஜ், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் 6 பேரும் ஜாமீன் கேட்டு ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 7 மற்றும் ஆகஸ்ட் 2ம் தேதிகளில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3வது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் விவேகானந்தன் ஆஜராகி, மே 7ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், 90 நாட்களை கடந்தும், காவல்துறை விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாததால் சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டுமென்று வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி, 6 பேருக்கும் சட்டப்பூர்வ ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: