கட்டமைப்பு, உபகரணங்கள் இருந்தும் மாவட்ட விளையாட்டு அரங்கில் போதிய பயிற்சியாளர் இல்லை; மாணவர்களிடம் குறைந்து வரும் விளையாட்டு ஆர்வம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் போதிய கட்டமைப்பு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இருந்தும் போதுமான அளவில் பயிற்சியாளர்கள் இல்லாததால் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெற முடியாத நிலை உள்ளதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கம், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதில், பள்ளி மாணவர்களுக்கு தடகளம், டென்னிஸ், வாலிபால், கபடி, கால்பந்து, ஹாக்கி, குத்துச்சண்டை போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அப்போது, அதற்கான பயிற்சியாளர்களும் இருந்தனர். தற்போது, நீச்சல் பயிற்சியாளர் தவிர, எந்த விளையாட்டுகளுக்கும் பயிற்சியாளர் கிடையாது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள், அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது.

விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சியாளர் மட்டும் இருப்பதால், அதில் அனைத்து போட்டிகளும் நடக்கின்றன. மற்ற விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால், மாணவர்கள் மத்தியில் விளையாட்டில் ஆர்வம் இருந்தும், முறையான பயிற்சி கிடைக்காமல் போய் விடுகிறது. விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டுமானால், அதற்கான உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதற்கான வசதி இருக்க வேண்டும். தற்போது மாவட்ட விளையாட்டு அரங்கில், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகள் இருந்தாலும் பயிற்சியாளர்கள் இல்லாததால் அவரவர் விருப்பப்படி விளையாடி வருகின்றனர்.

அதனால், அரசு சார்பில், நல்ல விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 மேலும் தற்போது, மாவட்ட அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகள் பெயரளவிற்கு நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ஒவ்வொரு விளையாட்டிற்கும், அதற்கான பயிற்சிகள் இருப்பது போல, மேலும் தெரிந்த கொள்ள அதற்கான புத்தகமும் இருக்கிறது. இதன்மூலம், எந்த விளையாட்டில் ஆர்வம் இருக்கிறதோ அதற்கான புத்தகத்தை படித்து, மேலும் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். எஸ்டிஏடி அதற்கான நிதியை வழங்குகிறது. புத்தகங்களை வாங்கி பாதுகாத்தால், பல விளையாட்டு வீரர்களுக்கு பயன்படும் என, விளையாட்டு ஆர்வலர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். எனவே,  போதுமான கட்டமைப்பு வசதிகள் இருக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கில் போதிய பயிற்சியாளர்களை நியமித்து விளையாட்டு வீரர்களை மெருகேற்ற வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: