அகரம்தென், திருவஞ்சேரி ஊராட்சிகளில் ரூ.4.72 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: எம்எல்ஏ நேரில் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம்தென், திருவஞ்சேரி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 50 ஆரத்திற்கும் மேற்பட்டோர்   வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஊராட்சிகளை சேர்ந்தவர்கள்  தங்கள்  பகுதிகளில் மேம்பாலம், சமுதாய நலக்கூடம், அங்கன்வாடி, கால்வாய்கள் அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

குறிப்பாக தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், திருவஞ்சேரி, மாடம்பாக்கம், அகரம் தென் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து வேங்கடமங்கலம் வழியாக வண்டலூர், கோவளம், திருப்போரூர், ஈ.சி.ஆர் சாலை செல்லும்  பொதுமக்கள் அகரம் தென்  அன்னை சத்யா நகர் அருகே இருந்த தரை பாலம் வழியாக தான் சென்று வந்தனர். ஆனால், அந்த தரை பாலம் முற்றிலுமாக சேதம் அடைந்ததால் மழைக்காலங்களில் அப்பகுதியில் உள்ள ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் அப்பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா முயற்சியால் சிறப்பு நிதி ரூ.3.42 கோடியில் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல அகரம் தென் ஊராட்சி பகுதிகளில் சமுதாய நலக்கூடங்கள் எதுவும் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் அவர்களது இல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் அகரம் தென் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு அகரம் தென் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமுதாய நலக்கூடத்தில் உள்ள சமையல் அறைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு மேலும் ரூ.29 லட்சம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கி உள்ளார். விரைவில் அப்பகுதியில் சமுதாய நலக்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இந்நிலையில், மேம்பாலம் மற்றும் சமுதாய நலக்கூடம் பணிகளை நேற்று எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார்.

அதேபோல திருவஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் செலவில் கால்வாய் பணிகள் மற்றும் ரூ.11.50 லட்சம் செலவில் கட்டப்படும் புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு நேற்று தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

Related Stories: