வங்கியில் திடீர் தீ விபத்து

சென்னை: விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோயில் அருகே உள்ள தாங்கல் தெருவில் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை இயங்கி வருகிறது. முன்னாள் ராணுவ வீரர் வீரசுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடத்தின் தரை தளத்தில், வாடையில் இந்த வங்கி இயங்கி வருகிறது.  இங்கிருந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு கரும் புகை வெளியாறியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதற்குள் தீ மளமளவென வங்கி முழுவதும் பரவியது. கீழ்ப்பாக்கம், கோயம்பேடு பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், துரிதமாக செயல்பட்டு வங்கியில் பற்றிய தீயை கட்டுப்படுத்தினர்.

 

இதனால் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் ரொக்க பணம் மற்றும் வாடிக்கையாளர்களின் தங்க நகைகள் தப்பியது. மேலும், அருகில் உள்ள கட்டிடங்களிலும் தீ பரவாமலும் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் வங்கியில் உள்ள முக்கிய கோப்புகள் பல எரிந்து நாசமானது. மேலும், வங்கியில் பொருத்தப்பட்டிருந்த 3 ஏசிகள் முற்றிலும் நாசமானது. இதுகுறித்து வங்கியின் உதவி மேலாளர் கிருஷ்ணகுமாரி அளித்த புகாரின்படி விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: