அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜவினர் 50 பேர் மீது வழக்கு

அண்ணாநகர்: திருமங்கலத்தில் அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜவினர் 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பாஜவினர் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலீசாரின் அனுமதியின்றி சென்னை திருமங்கலத்தில் இருந்து பாடி மேம்பாலம் வரை பாஜ மேற்கு மாவட்ட தலைவர் மனோகர் தலைமையில், 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை தேசிய கொடியுடன் பேரணி சென்றனர்.

 

இதன் காரணமாக, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர், மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.

தகவலறிந்த திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஊர்வலமாக சென்ற பாஜவினரை தடுத்து நிறுத்தினர். இதனால், பாஜவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர்,  போக்குவரத்து நெரிசலை  திருமங்கலம் போக்குவரத்து போலீசார் சரி செய்து, நெரிசலில் சிக்கிய வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசாரின் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜ மாவட்ட தலைவர் மனோகர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: