விளம்பர பலகை விழுந்ததில் படுகாயமடைந்த வாலிபர் பலி: டிரைவர் கைது

சென்னை: ஆலந்தூரில் மாநகர பஸ் மோதியதில், வழிகாட்டி விளம்பர பலகை விழுந்து படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக, பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை ஆசர்கானா சந்திப்பின் திருப்பத்தில் வேகமாக வந்த மாநகர பேருந்து இரும்பு வழிகாட்டி பலகையை தாங்கி நின்ற தூண் மீது வேகமாக மோதியது.

இதில் விளம்பர பலகை பெயர்ந்து விழுந்தது. அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில்  சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (30) உடல் மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகசுந்தரம் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான சண்முகசுந்தரம், சென்னையில் உள்ள தனியார் ஐஸ் நிறுவனத்தில் டெலிவரி பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். மனைவி, 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஓரிரு மாதங்களுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையும் உள்ளனர்.  

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுநர்  ரகுநாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.3லட்சம் நிதி : ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பர  பலகையின்  மீது மாநகர போக்குவரத்து கழக பேருந்து மோதி ஏற்பட்ட  விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  அதோடு, போக்குவரத்து கழக  நிதியில் இருந்து ரூ.1 லட்சம், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 2  லட்சம் என மொத்தம் ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டதின்  அடிப்படையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்த நிதியை  நேரில் சென்று வழங்கினார்.

Related Stories: