கியூட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கோரிக்கை

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு ஒன்றிய அமைச்சர்கள் அளித்த பதில்கள்: தென் சென்னை தொகுதி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் விதி எண் 377-ன் கீழ் பேசுகையில், ‘‘அனைத்து ஒன்றிய பல்கலைக்கழகங்களிலும்  உள்ள படிப்புகளுக்கு, தேசிய தேர்வு  முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் (கியூட்) மூலமே மாணவர்களை  சேர்க்க நடத்தப்படும் என்பது துரதிர்ஷ்டவசமானது. நீட் உள்ளிட்ட இதுபோன்ற  தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக்கல்வி முறைகளை  ஓரங்கட்டுகிறது. இது அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்காது. பெரும்பாலான மாநிலங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில  பாடத்திட்டத்தில் படிப்பவர்களாகவே உள்ளனர். எனவே, அனைத்துப் படிப்புகளிலும்  மாணவர் சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை என்பதை திரும்பப்  பெற வேண்டும்.

இதுகுறித்து தமிழக முதல்வரும் பிரதமருக்கு முன்னதாக கடிதம்  எழுதி அனுப்பியுள்ளார்’’என தெரிவித்தார். இந்தி பெயர் மாற்றவும் ஒன்றிய பல்கலைக்கழக திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தின் போது திமுக எம்பி ராஜேஷ்குமார்,‘‘தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம் என்பதை பல்கலைக்கழகமாக கருதப்பட்டு இப்போது இந்த சட்டத்தின் கீழ் நிறுவப்படுவதை நான் ஆதரிக்கிறேன். இருப்பினும் அதனை ‘கதி சக்தி விஸ்வ வித்யாலயா’என இந்தியில் பெயரை மாற்றுவது ஏன்? இதனை மாநில மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது தமிழகம், கேரளா ஆகிய மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் கிடையாது. இருப்பினும் இந்தி திணிப்புக்கு எதிரானவர்கள். அதனால் ‘கதி சக்தி விஸ்வ வித்யாலயா’என்பதை இந்திய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் என ஆங்கிலத்தில் மாற்றுவது மிகவும் அவசியமாகும்’’என பேசினார்.

காற்றாலையை அதிகரிக்கணும் எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா 2022 மீதான விவாதத்தில் எம்பி நவாஸ்கனி பேசியதில்,‘‘அரசு வழக்கம்போல் கொடுக்கும் தவறான வாக்குறுதிகள், உறுதியற்ற நம்பிக்கைகளை போல இல்லாமல் இந்த விவகாரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சோலார் விவகாரத்தில் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும். பசுமை எரிசக்தி உற்பத்தி செய்யும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களை ஊக்குவிக்க போதுமான நிதி மற்றும் ஊக்கத் தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஒன்றிய அரசு ஆராய்ந்து சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் வராத வகையில் புதுப்பிக்கப்பட்ட எரி சக்தியை உருவாக்க முயற்சிக்க வேண்டும்’’என பேசினார்.

Related Stories: