இளம்பெண்ணை தாக்கிய விவகாரம், பாஜ நிர்வாகியின் வீடு இடிப்பு; உபியில் அதிரடி நடவடிக்கை

நொய்டா: குடியிருப்பு வளாகத்தில் நடந்த பிரச்னையில் இளம்பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜ நிர்வாகி வீட்டின் முன் கட்டியிருந்த ஆக்கிரமிப்புக்கள் நேற்று புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேசம், நொய்டா பகுதியை சேர்ந்தவர் பாஜ நிர்வாகி காந்த் தியாகி. கடந்த வெள்ளியன்று அதே குடியிருப்பில் வசிக்கும் இளம்பெண்ணுக்கும் இவருக்கும் செடிகள் வளர்ப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண்ணை காந்த் தள்ளிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்ணின் புகாரின்பேரில் காந்த் மீது நொய்டா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வெள்ளியன்று இரவு முதல் காந்த் தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில் காந்த் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.25ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று  நொய்டா போலீசார் அறிவித்துள்ளனர்.

இதனிடையே நொய்டாவில் காந்த் தியாகி வீட்டின் தரைதளத்தின் முன் விதிமுறைகளை மீறி  தற்காலிக கட்டுமானங்களை கட்டியிருந்தார். விதிமீறல் குறித்து கடந்த 2019ம் ஆண்டு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. நேற்று காலை அவரது வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் புல்டோசர் மூலமாக அவரது வீட்டின் முன் அத்துமீறி கட்டப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன. உபியில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ அரசு, போராட்டம், ஆர்ப்பாட்டம் செய்யும் குறிப்பிட்ட சமூகத்தினரை குறி வைத்து புல்டோசர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சொந்த கட்சி நிர்வாகி மீதே அத்தகைய நடவடிக்கை எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: