×

மக்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்; வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான இலவச இணைப்பு ரத்தாகும் ஆபத்து: திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, மின்சார சட்டத்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இச்சட்டத் திருத்தத்தின் மூலம், தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு போன்ற பயன்மிகுந்த திட்டங்கள் ரத்தாகும் அபாயம் உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு, மின்சார சட்டம் 2003ல் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்ட திருத்த வரைவை வெளியிட்டது. அப்போதே, பல தரப்பு மக்களும், எதிர்க்கட்சிகளும் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த சட்ட திருத்தத்தின்படி, மின் துறை ஒட்டுமொத்தமாக தனியார் மயமாக்கப்படும். மாநில மின்வாரியங்களுக்கு பதிலாக ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, ஒட்டுமொத்த அதிகாரமும் ஒன்றிய அரசு வசம் மாற்றப்படும்.

இதன் காரணமாக, விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுவதும் பாதிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் மட்டும் அனுமதி பெற்று மாநிலங்களில் மின் விநியோகத்தை நடத்த முடியும். அந்நிறுவனம் இஷ்டத்திற்கு கட்டணத்தை நிர்ணயிக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு பாதகமாக அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

எனவே இந்த சட்டத்தை அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்த பின்னரே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இந்நிலையில், ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், மின்சார சட்ட திருத்த மசோதாவை திடீரென நேற்று தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்எஸ்பி கட்சி எம்பி பிரேமசந்திரன், ‘‘மின்சாரம் மாநில அரசுப் பட்டியலில் உள்ள துறையாகும். இதில் ஒன்றிய அரசு தலையிடும் போதும், அனைத்து மாநில அரசுகளிடமும் ஆலோசித்திருக்க வேண்டும்’’ என எதிர்ப்பு தெரிவித்தார்.

காங்கிரசின் மணிஷ் திவாரி, ‘‘இந்த மசோதா ஒரே பகுதியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மின் சேவை வழங்குவதை ஊக்கப்படுத்துகிறது. லாபம் தரும் பகுதிகளில் மட்டும் தனியார் நிறுவனங்கள் போட்டியிடும். அதே சமயம் மக்கள் தொகை குறைவான பகுதிகளில் மாநில அரசுகள், நஷ்டத்துடன் மின் சேவையை வழங்க வேண்டியிருக்கும். மேலும் இந்த மசோதா மின் விநியோகத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்பையும் வெகுவாக குறைக்கும்’’ என்றார்.
இதே போல, மின்சார சட்ட திருத்த மசோதா கூட்டாட்சி தத்துவதற்கு முற்றிலும் எதிரானது என திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் இணைப்பை ஒன்றிய அரசு நிறுத்த முயற்சிப்பதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ‘‘மசோதா பற்றி எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை முன்வைக்கின்றன. விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். இதில் எந்த மானியமும் திரும்பப் பெறப்படாது. மேலும், மானியங்கள் அனைத்தும் நேரடியாக மக்கள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த மசோதா தொடர்பாக பல மாநிலங்களுடனும், பங்குதாரர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகே தாக்கல் செய்துள்ளோம். இது மக்களுக்கு சாதகமான, விவசாயிகளுக்கு சாதகமான சட்ட திருத்தம்’’ என்றார்.

ஆனாலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்புவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தனர். அதே சமயம், இந்த மசோதாவில் உள்ள திருத்தங்கள் மீது தனித்தனியாக விவாதம் நடத்தி, ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் ஒப்புக் கொள்ளாததால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.



Tags : Lok Sabha ,DMK ,Congress , Electricity Amendment Bill tabled amid strong opposition in Lok Sabha; 100 units of free electricity for houses, free connection for farmers at risk of cancellation: DMK, Congress and other opposition parties walk out
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...